search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் கணக்கன்பட்டி காவடி
    X

    பூஜைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

    500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் 'கணக்கன்பட்டி காவடி'

    • தீர்த்தக்காவடி என்றவுடன், நம் நினைக்கு வருவது ‘கணக்கன்பட்டி காவடி’ தான்.
    • பூஜைக்காவடியை புனிதமாக மக்கள் கருதுகின்றனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா என்றாலே, பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபடுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

    அதன்படி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தத்தை காவடியாக எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தீர்த்தக்காவடி என்றவுடன், நம் நினைக்கு வருவது 'கணக்கன்பட்டி காவடி' தான். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர் தான் கணக்கன்பட்டி.

    இந்த கிராம மக்கள் மட்டுமின்றி பொட்டம்பட்டி, ராஜவரம்புதூர், பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இணைந்து காவடி எடுப்பதே 'கணக்கன்பட்டி காவடி' என்று அழைக்கப்படுகிறது.

    கணக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள், பாதயாத்திரையாக சென்று தீர்த்தக்காவடி எடுப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை பறை சாற்று வதாக கணக்கன்பட்டி காவடி உள்ளது.

    காவடி புறப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே 5 ஊர்களை சேர்ந்த காவடியை நிர்வகிக்கும் பரம்பரை நிர்வாகிகள், பக்தர்களிடம் கருத்துகளை கேட்டு அதற்கு ஏற்ப திட்டமிடுகின்றனர்.

    கணக்கன்பட்டியில் இருந்து கொடுமுடி காவிரி ஆற்றுக்கு நடந்தே சென்று திரும்ப வேண்டும். பூஜைக்காவடியை பின்தொடர்ந்தே செல்ல வேண்டும். பயணத்தின் போது தங்கும் இடங்களில் காவடி புறப்படுவதை தெரிவிக்க கொம்பு ஓசை ஒலித்தவுடன் தங்குமிடத்துக்கு திரும்ப வேண்டும் என்ற விதிமுறை குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

    பூஜைக்காவடியை புனிதமாக மக்கள் கருதுகின்றனர். பூமாலை சூடிய இந்த காவடியை சிலர் மட்டுமே சுமந்து செல்கிறார்கள். அந்த காவடிக்கு பின்னால் பக்தர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம்.

    பங்குனி உத்திரத்துக்கு 7 நாட்களுக்கு முன்பு கொடுமுடிக்கு பக்தர்களின் பாதயாத்திரை தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்காக கணக்கன்பட்டியில் இருந்து காவடி குடங்களுடன் கடந்த 30-ந்தேதி புறப்பட்டனர்.

    பூஜைக்காவடி முன்னே நடந்து செல்ல, அதன்பின்னர் மற்ற காவடி குழுவினர் அணிவகுத்து சென்றனர்.

    திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களை கடந்து பாதயாத்திரை காவடி சென்றது. அப்பியம்பட்டி, மயில்ரங்கம் ஆகிய இடங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு 2-ந்தேதி கொடுமுடி சென்று தங்கி காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    பின்னர் கலசங்களில் தீர்த்தம் எடுத்து அங்குள்ள மகுடேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தனர். அதன்பிறகு 3-ந்தேதி கொடுமுடியில் இருந்து புனித தீர்த்தம் கொண்ட கலசங்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    நேற்று முன்தினம் மாலை இவர்கள், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள அப்பியம்பட்டி நால்ரோடு பகுதிக்கு வந்தடைந்தனர்.

    இந்தநிலையில் 220 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை பயணம் மேற்கொண்ட தீர்த்தக்காவடி குழுவினர் நேற்று காலை கணக்கன்பட்டிக்கு வந்தடைந்தனர்.

    5 கிராம மக்கள் திரண்டு வந்து, ஊரின் எல்லையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் காவடிக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தீர்த்த கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பொது அன்னதானம் நடந்தது.

    இதேபோல் கிராமத்து இளைஞர்கள் நீர், மோர் போன்றவற்றை வழங்கினர். இதைத்தொடர்ந்து கொம்பு, மேளதாளம் முழங்க ஊருக்குள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்குள்ள காளியம்மன் கோவிலில் தீர்த்த கலசங்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

    8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி புறப்படுகிறது. காலை 5 மணிக்கு பழனி முருகன் கோவிலை காவடிக்குழுவினர் சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பிறகு முருக பெருமானுக்கு தாங்கள் கொண்டு சென்ற தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர். பின்னர் மலையின் பின்புறம் உள்ள பகுதிகளில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு விரதம் முடித்து மனநிறைவுடன் தங்களது ஊர்களுக்கு பக்தர்கள் திரும்பி செல்வார்கள்.

    Next Story
    ×