search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்:11-ந் தேதி தேரோட்டம்
    X

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்:11-ந் தேதி தேரோட்டம்

    • ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. மூலவரே உற்சவராக வீதியுலா வருவதால் இத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

    இதனைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறு கிறது.

    ஜூலை 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி. ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×