search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆனந்த வாழ்வு தரும் ஆனி திருமஞ்சனம்
    X

    ஆனந்த வாழ்வு தரும் ஆனி திருமஞ்சனம்

    • நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும்.
    • நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு தோற்றமே கூத்தன் (நடராஜர்) திருக்கோலமாகும்.

    நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும். அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திரமாகும். ஆனித்திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்' என்றும் அழைப்பர்.

    ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னிதியில் எழுந் தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம்.

    சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இங்கு ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    ஆனி உத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால், வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெருநோய் அகலும் என்று பாடுகின்றன திருமுறைகள்.

    இந்த நாளில் சிவ தரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி உத்திரத்தில் ஆனந்தம் தரும் நடராஜரை தரிசித்து, வாழ்க்கையில் ஆனந்தத்தை அடைய ஆனந்த கூத்தனை வழிபடுவது நல்லது.

    Next Story
    ×