என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை விளக்கும் சிறப்பு அலங்காரங்கள்
- 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி மூலவீதியில் வீதி உலா நடந்தது.
- 8-ந்தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் சித்திரை திருவிழாவில்தான் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் மதுரையை ஆட்சி செய்வதாக பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமான், நடத்திய 64 திருவிளையாடல்களில், 12 திருவிளையாடல்களை விளக்கும் லீலை அலங்கார காட்சிகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி திருவிளையாடல் லீலை அலங்காரங்கள் நேற்று முதல் தொடங்கின. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளேயே நடந்தன. இந்த ஆண்டுதான் வழக்கம் போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிவபெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை அலங்காரத்தில் நேற்று சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். இந்த திருவிளையாடல் பற்றிய புராண வரலாறு வருமாறு்-
முற்பிறவியில் பல புண்ணிய காரியங்களை ஒருவன் செய்திருந்தான். ஆனால், அவன் சிறிது பாவமும் செய்ததால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. காகங்களுக்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன் நிலையை எண்ணி வருந்தியது.
அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர், மதுரையை பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று கூறினர். அதை கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரைக்குளத்திலே நீராடி இறைவனை வணங்கியது.
இதை கண்ட இறைவன் குருவியின் பக்திக்கு இறங்கி மிருத்யுஞ்சிய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கினார் என்று ஐதீகமாக சொல்லப்படுகிறது.
இதை விளக்கும் விழாவையொட்டி நேற்று காலை மற்றும் இரவில் ஆவணி மூல வீதியில் சுவாமி-அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி ஆவணி மூல வீதியில் வலம் வருவதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.
இன்று (30-ந் தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், நாளை மாணிக்கம் விற்ற லீலை, 1-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 2-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 3-ந் தேதி அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகிறது.
4-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளன.
8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது. அன்று இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.. 9-ந்தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்