search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அய்யா வைகுண்டர் போதித்த தர்ம நெறி
    X

    அய்யா வைகுண்டர் போதித்த தர்ம நெறி

    • கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே ‘அய்யா வைகுண்டர்’ அவதாரம் ஆகும்.
    • ஸ்ரீமன் நாராயணன், வைகுண்டராக அவதரித்து வந்தபோது சப்த மாதர்களை திருக்கல்யாணம் புரிந்தார்.

    இறைவன் அவதாரத்தின் முக்கிய நோக்கமே, அன்பான பக்தர்களை காப்பதுதான். இருப்பினும் அன்பரை காக்க அவதரிக்கும்போது வம்பரையும் (தீயவர்) அழிக்கிறான், இறைவன். அவ்வாறே அன்பான சான்றோர் மக்களை காத்து வம்பான கலியனை அழிப்பதற்காக, கலியுகத்தில் திருமால் எடுத்த அவதாரமே 'அய்யா வைகுண்டர்' அவதாரம் ஆகும்.

    இறைவன் தனது அவதாரத்தின்போது வாழ்ந்து காட்டுவதன் வாயிலாகவும், வழிகாட்டுவதன் மூலமாகவும் நாம் நல்வழியில் வாழ்வதற்கான உபதேசங்களை தருகின்றார். அவ்வகையில் பெற்றோரிடம் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியுள்ளார். பெற்றோரை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் சொல்படி நடப்பதால் கிடைக்கும் நன்மையையும் அகிலத்திரட்டு அம்மானை மூலமாக எடுத்துரைக்கிறார்.

    துவாபர யுகத்தின் முடிவில், இறந்த உறவினர்களுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்யும்படி, பாண்டவர்களுக்கு பகவான் கிருஷ்ணர் உத்தரவிட்டார். இந்தநிலையில் கர்ணனுக்கு மோட்சம் அளிப்பதற்கான பணிகளும் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வியாசர், "பாவிகளோடு இருந்த கர்ணனுக்கு மோட்சம் அளிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணர், "திரேதா யுகத்தில் ராவணனை அழிப்பதற்காக, நான் ஸ்ரீராமனாக அவதரித்திருந்தேன். அந்த வேளையில் எனக்கு தொண்டு செய்வதற்காக வாலியாக படைக்கப்பட்டவன்தான் இந்த கர்ணன். ஆனாலும் ராவணனோடு வாலிக்கு இருந்த நட்பின் காரணமாக, நான் அவனை மறைந்திருந்து கொல்லும் நிலை உண்டானது. மார்பில் அம்பு பாய்ந்து உயிர் போகும் தருவாயில் என்னை உணர்ந்து கொண்ட வாலி என்னைப் பணிந்து, 'நன்றியுள்ள திருமாலே.. நான் உமக்கு ஏவல் செய்வதற்காகவே படைக்கப்பட்டவன். முன்பு அமிர்தம் கடையும்போது என்னை ஒரு புறத்தில் நிறுத்தி வேலை செய்ய வைத்து அழகு பார்த்தவர் நீங்கள். அப்படி இருக்கையில் நீங்கள் சொல்லியிருந்தால், ராவணனின் பத்து தலைகளையும் கொய்து, கொன்றிருக்க மாட்டேனா' என்று கேட்டான்.

    அப்போது நான், 'நீ எனக்கு ஏவல் செய்வதற்காகவே பிறந்தாய். இருப்பினும் எனக்கு ஆகாத பாவியான ராவணனுடன் நட்பு கொண்டிருந்தாய். அதோடு ராவணனிடம் 'உனக்கு எதிரி.. எனக்கும் எதிரி' என சபதமும் செய்திருந்தாய். நான் உன்னை மறைந்திருந்து தாக்காவிட்டால், ராவணனுக்கு நீ செய்த சத்தியத்தையும் மீறி, நீ என்னோடு நட்புகொண்டிருப்பாய். என் பக்தன் ஒருவன், அவனுடைய சத்தியத்தை மீறுவது சரியல்ல. எனவேதான் நீ என்னை அறியும் முன்பாக, நான் உன்னை மறைந்திருந்து வீழ்த்தினேன். அடுத்து வரும் யுகத்தில் கர்ணனாக பிறக்கப்போகும் நீ, தீயவனான துரியோதனனோடு இருந்தாலும் என் சொல்படி நடப்பாய். அப்போது உனக்கு மோட்சம் தருவேன்' என்று உறுதியளித்தேன்.

    அதன்படிதான் அவனை குந்தியின் மகனாக, பாண்டவர்களின் மூத்தவனாக பிறவிக்கச் செய்து, துரியோதனன் பக்கம் அனுப்பினேன். எனினும் இறைவனான என் புத்தியை உள்ளிருத்தி, அதன்படியே வாழ்ந்தான். தன் தாய்க்கு செய்த சத்தியத்தின்படி, ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரத்தை எய்தாமல் சத்தியம் காத்தான். அதனால்தான், முன்பு கூறியபடியே அவனுக்கு மோட்சம் அருள்கிறேன்" என்று கூறினார்.

    ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கக்கூடிய உச்சபட்ச உயர்வு, மோட்சம்தான். அது தாய்- தந்தையர் சொல்லைக் கேட்டு நடப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை மூலம் இறைவன் நமக்கு உணர்த்துகிறார். மேலும் 'ராமபிரான், மறைந்திருந்து வாலியைக் கொன்றது சரியா? தவறா?' என்று உலகில் நடக்கும் பட்டிமன்ற வினாவிற்கு சரி என்ற விடையை தருவதோடு, அதற்கான காரணத்தையும் அகிலத்திரட்டு அம்மானை மூலமாக அளிக்கிறார்.

    ஸ்ரீமன் நாராயணர் தனது கிருஷ்ண அவதாரத்தை நிறைவு செய்துவிட்டு, திருவரங்கம் செல்லும் வழியில் சப்த மாதர்கள் மூலமாக பிறந்தவர்களே சான்றோர்கள் ஆவர். சான்றோர்களை பெற்றெடுத்த பிறகு, சப்த கன்னியர்கள் தவம் செய்வதற்காக கானகம் சென்றனர். அவர்கள் முன்பாக தோன்றிய திருமால், சப்த கன்னியர்கள் பூலோகத்தில் பிறவி எடுக்கும்போது, தாம் வைகுண்டராக அவதரித்து அவர்களை திருமணம் செய்வதாக கூறினார். அதன்படியே ஸ்ரீமன் நாராயணன், வைகுண்டராக அவதரித்து வந்தபோது சப்த மாதர்களை திருக்கல்யாணம் புரிந்தார்.

    இந்த திருக்கல்யாணத்தின்போது சப்தமாதர்களின் பெற்றோரை அழைத்த அய்யா, கைப்பிடித்து தரும்படி கூறினார். அப்போது அவர்கள் அய்யாவிடம் "இதற்கு முன்பே இவர்கள் உமக்கு மனைவியர் தானே" என்று சொல்லிவிட்டு, "இருந்தாலும் நீர் சொன்னதால் நாங்கள் கைப்பிடித்து கொடுக்கிறோம்" என்று சொல்லி கைபிடித்துக் கொடுத்தனர். திருமணத்தின்போது கைப்பிடித்து கொடுக்கின்ற பெரிய பாக்கியத்தை பிள்ளைகள் தங்களின் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, இந்த அவதார திருக்கல்யாண லீலை மூலம் அய்யா வைகுண்டர் நமக்கு உணர்த்துகிறார். அய்யா வைகுண்டரின் வாக்குப்படி பெற்றோரை மதித்தும், அவர்களுக்கு கட்டுப்பட்டும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்தும் வாழ்வதுதான் பிள்ளைகளின் கடமையாகும்.

    இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தைக் கொண்டிருந்த அய்யா வைகுண்டருக்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னை மணலிப் புதுநகரில் உள்ள 'அய்யா வைகுண்ட தர்மபதி' ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் மூன்று வேளை பணிவிடையும், மூன்று வேளையும் நித்திய அன்னதானமும், தினமும் மாலையில் வாகன பவனியும் நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை 11.30 மணிக்கு அய்யா வைகுண்டர் திருத்தேரில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

    Next Story
    ×