search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அங்காரக வழிபாட்டின் பலன்கள்!
    X

    அங்காரக வழிபாட்டின் பலன்கள்!

    • அங்காரகன் ‘பூமி காரகன்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
    • அங்காரகன், சகோதரனுக்குரிய பலனையும் வழங்குபவர்.

    அங்காரகன் 'பூமி காரகன்' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதருக்கு வீடானது அரண்மனையைப் போல அமையும். அதுவே பூமி ஸ்தானாதிபதியுடன் அங்காரகன் சம்பந்தப்பட்டிருந்தால், அந்த நபர் கோட்டை கட்டி வாழ்வார்.

    அதே நேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அங்காரகனும், 4-ம் பாவ அதிபதியும் பலவீனமாக இருந்தால், அந்த நபர் வீட்டை விற்க நேரிடும். மேலும் பூமி சம்பந்தமான வழக்குகளில் சிக்கி அவதிப்படுவார்.

    அங்காரகன், சகோதரனுக்குரிய பலனையும் வழங்குபவர். எனவே ஒருவர் ஜாதகத்தில் அங்காரகன் நல்ல நிலையில் அமைந்தால், அவரது சகோதரர்களின் உதவியுடன் பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். அதுவே சரியான ஸ்தானத்தில் அங்காரகன் இல்லையென்றால், அல்லது நீச்சமோ, வக்ரமோ பெற்று இருந்தால், சகோதரர்களுடன் பகையை ஏற்படுத்தும். அதே நேரம் நீச்சபங்க ஸ்தானமாக இருப்பின், ராஜயோகம் வாய்க்கும்.

    திருமணப் பொருத்தம் பார்க்கையில் அங்காரகனுக்கு முக்கிய பங்கு உண்டு. இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இவர் இருப்பதை 'அங்கார தோஷம்' என்பார்கள். இதனை 'செவ்வாய் தோஷம்' என்றும் அழைப்பார்கள்.

    ஆனால் குரு பார்த்தாலோ, சனி பார்த்தாலோ அந்த தோஷம் நிவர்த்தியாகிவிடும். அதேபோன்று கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷத்தை செய்யமாட்டார்.

    இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்து, மிதுனம் அல்லது கன்னி லக்னமாக இருந்தாலும் அது தோஷம் இல்லை. செவ்வாய் 4-ம் இடத்தில் இருந்து மேஷம் அல்லது விருச்சிகம் லக்னமாக அமைந்தாலும் தோஷம் கிடையாது.

    செவ்வாய் 7-ம் இடத்தில் இருந்து, மகர லக்னம் என்றாலும் தோஷம் வராது. செவ்வாய் 8-ம் இடத்தில் இருந்து தனுசு அல்லது மீனம் லக்னமாக இருப்பினும் தோஷம் இல்லை. செவ்வாய் 12-ம் இடத்தில் இருந்து ரிஷபம் அல்லது துலாம் லக்னம் அமைந்தாலும் தோஷம் கிடையாது.

    இதுபோன்று செவ்வாய் தோஷ நிவர்த்தியை பற்றிய பல தகவல்களை, 'ஜாதக பிரகாசிகா' என்ற நூல் விவரமாக கூறுகிறது.

    செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில், விநாயகரையும் முருகரையும் பூஜித்தால் கட்டாயம் மேற்கண்ட தோஷங்கள் அனைத்தும் விலகும். மக்கள் செல்வமும் உண்டாகும்.

    அங்காரகன் பிறப்பு

    ஒரு முறை சிவபெருமான் யோகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வியர்வை உண்டாகி, அது பூமியில் விழுந்தது. அந்த வியர்வை ஒரு குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தையை, பூமாதேவி எடுத்து வளர்த்தாள்.

    குழந்தை வளர்ந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. அந்த தவத்தின் பயனாக, உடம்பில் யோக அக்னி உண்டாகி 'செவ்வாய்' (அங்காரகன்) என்ற பெயருடன் கிரக பதத்தைப் பெற்றது.

    அங்காரகன் பிறப்பு குறித்த இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு முறை பரத்வாஜர் என்ற முனிவர் நீராடுவதற்காக நதிக்கு சென்றார். அங்கு ஒரு தேவப் பெண்ணைக் கண்டார். அவளுடன் சில காலம் வாழ்ந்தார்.

    அந்த தேவப் பெண்ணிற்கும், பரத்வாஜ முனிவருக்கும் பிறந்தவர்தான், செவ்வாய். அவர் குழந்தை பருவத்தில் சகல கலைகளையும் கற்று, சிவபெருமானை நோக்கி தவம் செய்து, அங்காரக பதத்தை அடைந்ததாகவும் சொல்வார்கள்.

    Next Story
    ×