search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி
    X

    பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி

    • சூரிய கிரணத்தையொட்டி கோவில் நடை சாத்தப்படவில்லை.
    • அஸ்திரதேவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து லெ்கிறார்கள்.

    அக்னி ஸ்தலமாக கோவில் விளங்குவதால் சூரிய கிரணத்தையொட்டி கோவில் நடை சாத்தப்படவில்லை. இதனால் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கமாக இக்கோவிலில் சூரிய கிரகணம் தொடங்கும் போது கோவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை 5.17 முதல் 6.24 மணி வரை சூரிய கிரகணம் இருந்ததால் கிரகணம் தொடங்கும் முன்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக அருணாசலேஸ்வரரின் அம்சமான சூலரூபத்தில் உள்ள அஸ்திரதேவர், மங்கல வாத்தியங்கள் முழங்க பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். பின்னர் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அஸ்திரதேவருக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜை செய்த புனித கலச நீரை ஊற்றி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×