search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் அடையாள சான்றிதழ் சமர்ப்பிக்க தேவசம்போர்டு அறிவிப்பு
    X

    ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் அடையாள சான்றிதழ் சமர்ப்பிக்க தேவசம்போர்டு அறிவிப்பு

    • முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.
    • பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியிருப்ப தாவது:-

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரிபார்க்கப்படும் போது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவர்களின் பதிவு எப்படி செய்யப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், தேவசம்போர்டும் கூட்டாக முடிவு செய்யும். அது தொடர்பான முடிவு நவம்பர் 10-ந்தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்.

    பதினெட்டாம்படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15,500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல கோர்ட்டின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    பம்பையில் இருந்து சபரி மலைக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மின் கழிப்பறைகள் வசதி செய்யப்படும். யாத்திரை காலங்களில் 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    Next Story
    ×