search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் `தசரா
    X

    இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் `தசரா'

    • தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக தசரா கருதப்படுகிறது.
    • விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்.

    இந்தியாவின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக தசரா திருவிழா பார்க்கப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக இந்த தசரா விழா கருதப்படுகிறது.

    விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா, முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

    இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என்ற பல மாநிலங்களிலும் மகிஷா சூரனை, துர்க்கை தேவி அழித்த தினமாகவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுத்த தினமாகவும், தீமையை நன்மை வெற்றிகொண்ட தினமாகவும் 'தசரா' கொண்டாடப்பட்டாலும், இந்த விழா அந்தந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் வரலாற்று மற்றும் கலாசார நிகழ்வுகளை பதிவு செய்வதாக இருக்கிறது.

    இங்கே இந்தியா முழுமைக்குமாக உள்ள மாநிலங்களில் தசரா கொண்டாட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.


    தென்னிந்தியா

    கர்நாடகா மாநிலம் மைசூர் நகரில், 'நாடா ஹப்பா' எனப்படும் மாநில விழாவாக 'தசரா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது மைசூர் அரண்மனை ஒளியூட்டப்படும்.

    அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலை இடம்பெற்று, அது ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

    அப்போது அந்த ஊர்வலத்தின் முன்பாக, கலாசார நிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் கண்காட்சியும் இடம் பெறும். அது அந்த நகரின் வாழ்வியலை உயிர்ப்பித்துக் காட்டுவதாக அமையும்.


    தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது, குலசேகரன்பட்டினம் என்ற ஊர். இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ற தாகும். இது ஒரு கிராமிய விழா போன்று நடைபெறுவதுதான், இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

    10 நாள் கொண்டாட்டமான இந்த விழாவில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் அம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நேர்ச்சைக்கு தகுந்தபடி, ஒவ்வொரு வேடம் அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அதில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள், அரக்கர்கள் உள்ளிட்ட வேடங்களும் அடங்கியிருக்கும்.

    தென்னிந்தியாவின் சில பகுதிகளில், அறிவு, இசை மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு, விஜயதசமி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வு 'வித்யாரம்பம்'. இந்த நாளில் பிள்ளைகளின் கற்றல் மற்றும் எழுத்துகளை தொடங்குவதை பலரும் செய்கிறார்கள். இதனால் கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வித்யாரம்பம் சடங்கிற்காக கோவில்கள் மற்றும் கலாசார மையங்களில் மக்கள் கூடுவார்கள். அங்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு பச்சை அரிசி பரப்பிய தட்டில், தங்கள் மொழியின் முதல் எழுத்தை எழுதவைத்து படிப்பை தொடங்கச் செய்வார்கள்.


    வட இந்தியா

    உத்தரபிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், தசரா பெருவிழாவானது 'ராமலீலா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்ட விழாவானது, ராமாயண காவியத்தை நாடகமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெறுகின்றன.

    ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்பதுடன் இந்த விழா நிறைவு பெறுகிறது. 10 தலையுடன் செய்யப்பட்ட பிரமாண்டமான ராவணனின் உருவ பொம்மையின் மீது, பலவிதமான வண்ண பட்டாசுகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருக்கும். அம்பின் நுனியில் தீ பற்ற வைத்து, பொம்மையின் மீது எய்துவார்கள்.

    இதில் ராவணனின் உருவ பொம்மை வெடித்துச் சிதறி, வானில் வர்ணஜாலத்தைக் காட்டும். தீமையில் இருந்து கிடைக்கும் விடுதலை பெருநாளாக வடஇந்தியாவில் தசரா கொண்டாடப்படுகிறது.


    கிழக்கு இந்தியா

    மேற்கு வங்காளம், அசாம் மற்றும் ஒடிசாவில், 10 நாட்கள் நடைபெறும் துர்க்கா பூஜையின் நிறைவு நாளாக 'தசரா' பார்க்கப்படுகிறது. துர்க்கா தேவியின் பிரமாண்டமான சிலைகள், அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் வைத்து 10 நாட்களும் வணங்கப்படும்.

    10-வது நாளில் இந்த சிலைகள் அங்குள்ள ஆறுகள் அல்லது பிற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த விழாவில் பாடுதல், நடனம் ஆகியவையும் அடங்கும்.


    மேற்கு இந்தியா

    மகாராஷ்டிராவில் நடைபெறும் தசரா விழாவானது, செழிப்புக்கான தெய்வத்தின் ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது. மக்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக, தங்கத்தை அடையாளப்படுத்தும் 'ஆப்டா' இலைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள்.

    குஜராத்தில் நடைபெறும் தசரா பெருவிழா, உற்சாகத்தின் உச்சகட்டமாக அமையும். இந்த விழாவில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் வண்ணமயமான உடைகளுடன், துடிப்பான ஆடலும் அமைந்திருக்கும்.


    வடகிழக்கு இந்தியா

    திரிபுரா போன்ற மாநிலங்களில், துர்க்கா பூஜையின் முடிவைக் குறிக்கும் வகையில் ஊர்வலங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தசரா கொண்டாடப்படுகிறது. துர்க்கை சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி மிகுந்த பக்தியுடனும், உற்சாகத்துடனும் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×