என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
எல்லாம் வல்ல சித்தரால் கரும்பு சாப்பிட்ட கல்யானை
- எல்லாம் வல்ல சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்ஏராளம்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் இந்த அற்புதத்தை நடத்தினார்.
கல் யானை கரும்பு சாப்பிடுமா? சித்தர்கள் நினைத்தால் சாப்பிடும். அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர் எல்லாம் வல்ல சித்தர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் இந்த அற்புதத்தை நடத்தினார். அதற்கான சான்றுகள் இன்றும் அந்த ஆலயத்தின் உள்ளே இருக்கின்றன. எல்லாம் வல்ல சித்தர் மதுரை வீதிகளில் சுற்றித்திரிந்த போது முதலில் அவரது சிறப்பை யாரும் உணரவில்லை. ஆனால் அவர் அற்புதங்கள் செய்யத்தொடங்கிய பிறகுதான் அவரை பற்றிய தகவல்கள் மதுரை முழுக்க பரபரப்பாக பேசப்பட்டன. அந்த அளவுக்கு அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஒவ்வொன்றும் இருந்தன.
தன்னை தேடி வரும் வயதானவர்களை திடீரென இளைஞர் ஆக்கி விடுவார். ஆணை பெண்ணாக மாற்றி விடுவார். கல்லை எடுத்து வீசுவார். அவை தங்கங்களாக மாறும். ஊசி முனையில் நின்றபடி நடனமாடுவார். மரணம் அடைந்தவர்களை உயிரோடு எழுப்பி உள்ளார்.
இப்படி அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த அற்புதங்கள் நிகழ்ந்த காலத்தில் மதுரையில் அபிஷேக பாண்டியன் ஆட்சி நடந்து வந்தது. அவரது காதுகளுக்கும் எல்லாம் வல்ல சித்தர் நடத்திய அற்புதங்கள் எட்டியது.
அந்த சித்தரை பார்க்க வேண்டும் என்ற ஆசை அபிஷேக பாண்டியனுக்கு ஏற்பட்டது. தனது வீரர்களை அனுப்பி சித்தரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார். காவலாளிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று சித்தரை பார்த்து, "மன்னர் உம்மை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். வாரும்" என்றனர்.
ஆனால் சித்தரோ அந்த காவலாளிகளை கண்டு கொள்ளவே இல்லை. "உங்கள் மன்னரால் எனக்கு எந்த பயனும் இல்லை. நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும். அவருக்கு தேவை என்றால் இங்கே வந்து என்னைப்பார்க்க சொல்லுங்கள்" என்றார்.
வீரர்களும் மன்னரிடம் இதை தெரிவித்தனர். அபிஷேக பாண்டியன் ஆத்திரப்படவில்லை. இறை அருள் பெற்றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று நினைத்தார். பிறகு அவரே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று சித்தரை சந்தித்தார்.
சித்தரிடம் அவர், "உங்களால் எது வேண்டுமானாலும் செய்ய முடியுமாமே.... உண்மையா?" என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர், "ஆமாம். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதனால்தான் எனக்கு எல்லாம் வல்லவன் என்று பெயர்" என்றார். இதைக்கேட்டதும் மன்னருக்கு அவரை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அவர் சித்தரை பார்த்து, "நான் சொல்வதை உங்களால் நிகழ்த்திக்காட்ட முடியுமா?"என்றார். அதற்கு சித்தர், "நானே ஆதியும், அந்தமும் ஆவேன். என்னால் எதையும் செய்ய முடியும்"என்றார். உடனே மன்னர், " என்ன கடவுள் போல பேசுகிறீர்களே.... நீங்கள் என்ன கடவுளா?" என்றார். சித்தர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே, "உங்களுக்கு என்ன வேண்டும். அதை சொல்லுங்கள்" என்றார். அபிஷேக பாண்டியன் என்ன கேட்பது என்று யோசித்தார். சுற்றும் முற்றும் பார்த்த அவர் கண்களில் கல் யானை சிற்பம் தெரிந்தது. உடனே அவர் சித்தரிடம், "இந்த கல் யானையை கரும்பு சாப்பிட வையுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார்.
மன்னர் உத்தரவுப்படி கரும்புக்கட்டுகள் கொண்டு வரப்பட்டன. எல்லாம் வல்ல சித்தர் எதுவுமே சொல்லவில்லை. கரும்பு கட்டுகளை வாங்கி அந்த கல் யானை சிற்பம் முன்பு போட்டார். "சாப்பிடு" என்று குரல் கொடுத்தார். அடுத்த வினாடி கல் யானை உயிர் பெற்று நிஜ யானையை போல் மாறி பிளிறியது.அங்கு கிடந்த கரும்புக்கட்டுகளை எடுத்து சுவைத்து சாப்பிட்டு விட்டது. இதைக்கண்ட மன்னர் ஆச்சரியப்பட்டார். எல்லாம் வல்ல சித்தரின் மகிமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். இதனால் மனம் இரங்கிய சித்தர், "என் திறமையை பரிசோதித்து பார்த்து விட்டாய்.... உனக்கு ஏதாவது வேண்டுமா கேள்" என்றார். மன்னர் கண்ணீர் மல்க, "இந்த ராஜ்ஜியத்தை வழிநடத்த எனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும்" என்று கேட்டார்.
எல்லாம் வல்ல சித்தர், "அப்படியே உண்டாகும் போய்வா"என்று அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே அபிஷேக பாண்டியனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விக்கிரமன் என்று பெயரிட்டு அந்த குழந்தையை அவர் வளர்த்தார் என்பது வரலாறாகும்.
இத்தகைய சிறப்புடைய எல்லாம் வல்ல சித்தர் மதுரையில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சித்தர் ஆய்வு நூல்களில் குறிப்புகள் உள்ளன. இவர் விண்வெளி பயணத்தில் மிகவும் சிறந்து விளங்கினார். பல தடவை சமாதி யோகத்தில் இருந்துள்ளார். இவர் 800 ஆண்டுகள் 28 நாட்கள் வாழ்ந்ததாக சில சித்தர்கள் தங்களது நூல்களில் எழுதி உள்ளனர். போகர் இவரை பற்றி கணித்து சில குறிப்புகளை கொடுத்துள்ளார். அதில் எல்லாம் வல்ல சித்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய சித்தராக இவரை கருதுகிறார்கள்.
இவர் ரசவாத வித்தையில் கரைகண்டவராக திகழ்ந்தார். எந்த ஒரு பொருளை அவர் தொட்டு கொடுத்தாலும் அது தங்கமாக மாறும் அதிசயம் நடந்தது. சில சமயங்களில் அவர் சொன்னாலே பொருட்கள் தங்கமாக மாறின. அந்த வகையில் திருப்புவனத்தில் வாழ்ந்த பொன்னனையாள் என்ற தேவதாசி பெண்ணுக்கு அவர் தங்கம் வரவழைத்து கொடுத்தது இன்றும் வரலாற்று பதிவாக உள்ளது.
சிறந்த சிவ பக்தையான பொன்னனையாள் சிவனடியார்களுக்கு தினமும் உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.ஒருநாள் அவள் சிவனடியார்களுக்கு அன்னதானம் கொடுத்த போது ஒரே ஒரு சிவனடியார் மட்டும் உணவு சாப்பிடாமல் அமைதியாக இருந்தார்.
அவரிடம் பொன்னனையாள், "ஏன் சுவாமி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? வேறு ஏதாவது உங்களுக்குவேண்டுமா?" என்று கேட்டாள். அதற்கு அவர், "எனக்கு எதுவும் வேண்டாம். உனது முகத்தில் ஏதோ ஒரு கவலை தெரிகிறது. அதை சொன்னால் தீர்த்து வைக்கிறேன்" என்றார். உடனே பொன்னனையாள் கண்ணீர் விட்டு அழுதபடி தனது குறையை தெரிவித்தாள்.
"இந்த ஊரில் உள்ள சிவபெருமான் பூவனநாதருக்கு தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த அளவுக்கு என்னிடம் பொருள் வசதி இல்லை.அதை நினைத்துதான் கவலையில் இருக்கிறேன்" என்றாள்.
அதைக்கேட்ட அவர், " நீ வைத்திருக்கும் பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வா" என்றார். அதன்படி பொன்னனையாள் எல்லா பாத்திரங்களையும் அவர் முன்பு கொண்டு வந்து வைத்தாள். அந்த பாத்திரங்கள் மீது திருநீறு அள்ளி வீசிய அவர், "இந்த பாத்திரங்களையெல்லாம் இன்று இரவு தீயில் போட்டுவிடு. அவை உனக்கு தங்கமாக மாறி கிடைக்கும்" என்றார்.
அவர் சொன்னது போலவே அன்றிரவு பொன்னனையாள் பித்தளை பாத்திரங்களை தீயில் அள்ளிப்போட்டாள். அவை அனைத்தும் தங்கமாக மாறியது. அந்த தங்கத்தை சிற்பியிடம் கொடுத்து அழகான சிலை வடித்தாள். அதன்பிறகுதான் தனக்கு உதவி செய்த சிவனடியாரை தேடி கண்டுபிடித்து பேச வேண்டும் என்ற உணர்வு பொன்னனையாளுக்கு எழுந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருப்பேன் என்று அவர் சொன்னது பொன்னனையாளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தாள். கோவிலுக்குள் கடம்பமரத்தடியில் சித்தர் உட்கார்ந்திருந்தார். அப்போதுதான் தனக்கு தங்கம் தந்து அற்புதங்கள் நிகழ்த்தியது எல்லாம் வல்ல சித்தர் என்ற உண்மை பொன்னனையாளுக்கு தெரிய வந்தது.
கண்ணீர் மல்க அவள் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கினாள். "உங்களது உதவியால்தான் தங்கத்தில் ஈசனுக்கு சிலை செய்ய முடிந்தது. உண்மையில் நீங்கள் யார்?என்றுபல்வேறு கேள்விகளை எழுப்பினாள்.
ஆனால் எல்லாம் வல்ல சித்தர் எதுவும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தார். பொன்னனையாள் விடவில்லை. "எனக்கு நீங்கள் உண்மையை சொல்லியே தீர வேண்டும்" என்று நச்சரித்தாள். உடனே சித்தர், "என்னை சொக்கநாதா என்பார்கள். சிலர் சுந்தரேசா என்கிறார்கள். சிலர் எல்லாம் வல்லவர் என்கிறார்கள். எனக்கு இப்படி ஏராளமான பெயர்கள் இருக்கிறது. உனக்கு எந்த பெயரில் அழைக்க விருப்பமோ அந்த பெயரில் அழைக்கலாம்" என்றார்.
பிறகு அப்படியே தியான கோலத்தில் அமர்ந்தார். நீண்ட நேரமாக அவரது தியானம் நீடித்தது. பொன்னனையாள் பொறுமை இழந்து, "சுவாமி நான் விடைபெற வேண்டும். உத்தரவு தாருங்கள்"என்றாள். ஆனால் எல்லாம் வல்ல சித்தர் தியானத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை.
அவர் அருகில் சென்ற போதுதான் எல்லாம் வல்ல சித்தர் கல்சிலையாக மாறி இருப்பது தெரிய வந்தது. இறைவனே சித்தராக மாறி இவ்வளவு நாளும் அருள் புரிந்ததாக மதுரை மக்கள் கொண்டாடினார்கள். அவர் வாழ்ந்த அந்த இடத்திலேயே அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டது.
தற்போது அந்த இடம் மதுரை ஆலயத்தின் கருவறை அருகே உள்ள தனி சன்னதியாக உள்ளது. அந்த சன்னதி கருவறையில் எல்லாம் வல்ல சித்தரின் தியான கோல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆலயத்தில் இருக்கும் ஈசனை சுந்தரேசர் என்று சொல்வது போல இந்த சித்தரை சுந்தரானந்தர் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலா னவர்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றே சொல்கிறார்கள். இவருக்கு தினமும் பூஜை நடத்தப்படுகிறது.
இவருக்கென்று அபிஷேகங்கள் செய்யப் படுவதில்லை. அதற்கு பதில் தைலகாப்பு செய்யப்படுகிறது. ரேவதி நட்சத்திர நாட்களில் நிறைய பேர் வந்து இவரை வழிபட்டு செல்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் சித்தரை பற்றி தெரிந்தவர்கள் இவரது சன்னதி அருகே நீண்ட நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இவர் தனது உயிரை பிரித்துக்கொண்ட போது பொன்னனையாள் கதறி அழுது புலம்பினாள். அப்போது அசரீரி ஒன்று கேட்டது. அதில், "நான் இந்த இடத்திலேயே அமர்ந்து இருப்பேன். எனக்கு பூப்பந்தல் அமைத்து வழிபாடு செய்தால் நினைத்ததை நடத்தி தருவேன்" என்று குரல் எழுந்தது.
அதன்படியே பொன்னனையாள் பூக்களால் பந்தல் போட்டு எல்லாம் வல்ல சித்தரை வழிபட்டாள். அன்று முதல் இங்கு சித்தரை பூக்களால் கூடாரம் அமைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. 500 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் பூக்கூடாரம் அமைத்து இந்த சித்தரை வழிபடலாம்.
எல்லாம் வல்ல சித்தர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். இதனால் சித்தருக்கும் சித்தர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இதனால் எல்லாம் வல்ல சித்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உரிய வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட நாட்களில் இந்த சன்னதியில் சென்று வழிபட்டால் உரிய பலன்களை பெற முடியும்.
மதுரைக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தும் எல்லாம் வல்ல சித்தரை வழிபடலாம். சுந்தரானந்தர் படத்தை வீட்டில் வைத்து ஐந்துமுகவிளக்கேற்றி அவர் தொடர்பான போற்றிகளை சொன்னாலே போதும். குறிப்பாக, "ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!!"என்ற மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி வழிபடுவது நல்லது.
வியாழக்கிழமைகளில் எல்லாம் வல்ல சித்தரை வழிபடுவது மிகவும் சிறப்பானது. மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால் சித்தர் அருளை எளிதாக பெறலாம்.
எல்லாம் வல்ல சித்தரை தொடர்ந்து வழிபாடு செய்பவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமை அகன்று வளமான வாழ்வு கிடைக்கும். குரு பக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். இதன்மூலம் முக்தி பாதைக்கும் காலடி எடுத்து வைக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது மறக்காமல் எல்லாம் வல்ல சித்தரையும் வழிபாடு செய்து விட்டு வாருங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்