search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநாங்கூரில், விடிய, விடிய நடந்த வீதிஉலா
    X

    திருநாங்கூரில், விடிய, விடிய நடந்த வீதிஉலா

    • பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • 130-வது கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இந்த 11 கோவில்களில் இருந்து பெருமாள், நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இதன் ஆண்டு 130-வது கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நாங்கூர் மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம் குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிக்கொண்ட பெருமாள், வண்புரு டோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் வரதராஜ பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 பெருமாள்களும் ஒருசேர எழுந்தருளினர்.

    அப்போது திருமங்கை ஆழ்வார் அவரது சிஷ்யர் மணவாள மாமுனிகள் ஆகியோர் அனைத்து பெருமாள்களையும் வரவேற்றார். பின்னர், 11 பெருமாள்களும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு 12 மணிக்கு மணிமாடக்கோவில் ராஜகோபுரவாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுத வள்ளி தாயாருடன், திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர்.தொடர்ந்து, அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

    அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று, கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு, தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர்.

    அதனைத்தொடர்ந்து, இரவு 2.30 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி விடிய, விடிய வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×