search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்குகிறது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்குகிறது

    • 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 26-ந் தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவில் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வருதல் போன்றவை நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம் போன்றவற்றில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வருவார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நிகழ்ச்சியில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம் போன்றவை இடம்பெறுகின்றன. ஊர்வலம் முடிவில் மகாதானபுரத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு வருதல் நடைபெறும்.

    நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பரிவேட்டை நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×