search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூசாரிபாளையம் பாலமரத்துக் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    யானை ஊர்வலத்துடன் தீர்த்தக் குடங்கள் முளைப்பாரிகை ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பூசாரிபாளையம் பாலமரத்துக் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • இன்று இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை காலை யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஊத்துக்குளி அருகே பூசாரிபாளையம் பகுதியில் பால மரத்துக்கருப்பராயசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பாலாலயம் செய்து கொடுமணல் தங்கம்மன் கோவில் செயலாளர் ராமசாமி கவுண்டர் தலைமையில் பாலமரத்துக் கருப்பராயன் சுவாமிக்கு கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிலை விமானம், சாளரகோபுரம், கன்னிமார் ஆலயம், விநாயகர் ஆலயம், திற் சுவர் என கல்ஹார திருப்பணிகளும், வர்ண கலாப திருப்பணிகளும் நிறைவடைந்தது. நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரஹ, ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் செங்கப்பள்ளி அழகு நாச்சி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் முளைப்பாரி அதிர்வெட்டு முழங்க வாத்தியாய கோஷங்களுடன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீர்த்த குடங்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் வாத்தியாய இசைக்கு தகுந்தார் போல் நடனமாடி சென்றன.

    இன்று (புதன்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜை, தீபாராதனை, அதனைத் தொடர்ந்து மாலை கோபுர கலசம் வைத்த நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று பிற்பகல் 3-ம் கால யாக பூஜை, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை)காலை 4-ம் கால யாக பூஜைகளும், அதனைத்தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    காலை 8.30 மணிக்கு மேல் பாலமரத்துக் கருப்பராயசுவாமி விமான கும்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து விநாயகர், பாலமரத்துக் கருப்பராயசாமி, கன்னிமார் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் தசதானம், தசதரிசனம், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, முளைப்பாரிகை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பூசாரிபாளையம் ஊர் பொதுமக்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசாரும் செய்துள்ளனர்.

    Next Story
    ×