search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வருகிற 6-ந் தேதி மாசிமக தீர்த்தவாரி:கும்பகோணம் மகாமக குளத்தில் தூய்மை பணி
    X

    மகாமக குளத்தை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தபோது எடுத்தபடம்.

    வருகிற 6-ந் தேதி மாசிமக தீர்த்தவாரி:கும்பகோணம் மகாமக குளத்தில் தூய்மை பணி

    • தீர்த்தவாரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும், 21 தீர்த்தக்கிணறுகளும் உள்ளன.

    இந்தியாவில் உள்ள புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்று கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் ஆகும். கும்பகோணம் காசிவிஸ்வநாதர் ேகாவில் அருகே இந்த குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனிதநீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவார்கள்.

    6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும், 21 தீர்த்தக்கிணறுகளும் உள்ளன.

    மாசி மகத்தையொட்டி மகாமக குளத்தை சுற்றி உள்ள சைவ, வைணவ தலங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சிவன், பெருமாள் கோவில்களில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாசி மக தீர்த்தவாரி வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. தீர்த்தவாரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மகாமக குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாமக குளத்தின் படிக்கட்டுகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

    இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×