search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தெய்வீக வடிவானவன் முருகன்
    X

    தெய்வீக வடிவானவன் முருகன்

    • முருகன் தமிழ் கடவுள்.
    • முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம்.

    முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிக தொன்மையானது. 'முருகு' என்ற சொல்லுக்கு அழியாத அழகு, குன்றாத இளமை, இயற்கை மணம், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை என பல பொருள் உண்டு. 'மு' என்பது திருமாலையும் 'ரு' என்பது சிவபெருமானின் அம்சத்தையும் 'க' என்பது பிரம்மனையும் குறிக்கும். உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

    மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் முழுமுதற் கடவுள் முருகன். அதனால் முருகனைக் 'குறிஞ்சிக் கிழவன்', 'மலைகிழவோன்' என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.

    முருகன் தமிழ் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். உடலே ஞானமாகவும், பெரிய உலகமே கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

    முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம். முருகனை வணங்கினால் பல கடவுளை வணங்கி அடையும் பயன்களை பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால் தந்தை தாயாகிய சிவன்-பார்வதி, தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும். தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது. முருகன் தன் அடியவர் வேண்டும் நலங்களை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மை வாய்ந்தவன். முருகனை அன்புடன் வழிபட்டு முருகா.. முருகா... என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது.

    Next Story
    ×