search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-14)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-14)

    • தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு.
    • நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு

    பார்வைகள் பலவிதம். அவற்றில் அழகிய பார்வையும் உண்டு. அன்பு பார்வையும் உண்டு. கருணைப் பார்வையும், கலங்கியப் பார்வையும் அடங்கும். சிந்திக்கும் பார்வையும், சீர்திருத்தும் பார்வையும், கண்டிக்கும் பார்வையும் வரவேற்கப்படுகின்றன. எனினும், காமப்பார்வையையும், சந்தேகப் பார்வையையும், பயமுறுத்தும் பார்வையையும், சீரழிக்கும் பார்வையையும், கவிழ்க்கும் பார்வையையும் இஸ்லாம் தடை செய்கிறது. தீய பார்வைகளை தீய்த்துவிடும் ஆயுதமாக நோன்பு அமைந்துள்ளதாக அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "(நபியே!) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்." (திருக்குர்ஆன் 24:30)

    "இன்னும் இறை விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண் டும்." (திருக்குர்ஆன் 24:31)

    ஆண்கள், பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தும்படி திருக்குர்ஆன் ஏன் பணிக் கிறது? அது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் அம்புகளாகவும் அமைந்துள்ளதாக பின்வரும் நபிமொழி தெரிவிக்கின்றன. "பார்வை, ஷைத்தானின் விஷம் தடவப்பட்ட அம்புகளில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: மஸ் ஊத் (ரலி), நூல்: தப்ரானி)

    இப்னு "பாதைகளின் மீது அமர்ந்து இருப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்' என நபி (ஸல்) கூறிய போது, 'நபியே! நாங்கள் பாதையில் அமர்ந்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது?' என தோழர்கள் வேண்டியதும், 'பாதைக்குரிய உரிமைகளை கொடுத்திடுங்கள்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.

    'பாதைக்குரிய உரிமைகள் என்ன?' என்பது பற்றி தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'பார்வையை தாழ்த்திக் கொள்வது, நோவினை தரும் பொருட்களை அகற்றுவது, ஸலாமுக்கு பதில் கூறுவது, நன்மையை ஏவி தீயதை தடுப்பது' என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத்,நூல்: திர்மிதி)

    தகாத பார்வைகளை தவிர்த்து வாழ்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க பொறுப்பேற்று இருக்கிறார்கள். எவர் தமது இரண்டு கண்களையும் தடுக்கப்பட்ட காட்சிகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்து, பார்வையை தாழ்த்தி நோன்பிருக்கிறாரோ, அவரின் நோன்பை எல்லாம் வல்ல அல்லாஹ் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, அவரை தன் கருணை பார்வையைக் கொண்டு பார்க்கிறான்.

    "எதைப்பற்றி உமக்கு(த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும், இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்." (திருக்குர்ஆன் 17:36) நோன்பாளிகளே! தடுக்கப்பட்ட பார்வைகளை விட்டும் தவிர்த்து, நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    Next Story
    ×