search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-27)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-27)

    • லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்பட்டிருப்பது நன்மைக்கே!
    • உங்களுக்கிடையே ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள்.

    லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்பட்டிருப்பது நன்மைக்கே!

    அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானின் நடுப்பத்தில் இஃதிகாப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து, எங்களுக்கு உரைநிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர், அது எனக்கு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல்கத்ரில்) ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்வது போல் கனவு கண்டேன். எனவே, யார் என்னுடன் இஃதிகாப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!' என்றார்கள்.

    'நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தை பார்த்தேன். (நூல்: புகாரி)

    உபாதா இப்னுஸாமித் (ரலி) அறிவிக்கிறார். லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்.அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது பற்றிய விளக்கம் நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்.

    எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் தெரிய வருவது என்னவெனில் 'லைலத்துல் கத்ர்" எந்த இரவு என்று ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பிறகு, அது மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் இரண்டு நபித்தோழர்கள் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க நபி (ஸல்) அவர்களின் கவனம் திரும்பிய போது, எந்த இரவில் லைலத்துல் கத்ர் உள்ளது என்று தான் சொல்ல வந்த விளக்கத்தை மறந்துவிட்டார்கள்.

    'நபி (ஸல்) அவர்கள் 'தமது தோழர்களிடம் உங்களுக்குத் தொழுகை, நோன்பு, தானம் ஆகியவற்றை விட சிறந்த ஒரு செயலை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். 'அவசியம் அறிவியுங்கள்' என்று தோழர்கள் வேண்டிய போது, உங்களுக்கிடையே ஒற்றுமையாக நடந்து கொள்ளுங்கள். அது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாகும். உங்களுக்கிடையே சண்டை சச்சரவு, மார்க்கத்தை மொட்டையடிப்பதாகும்' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அபூதாவூத்)

    வணக்கத்தை விட இணக்கமாக வாழ்வது தான் சிறந்தது. அத்தகைய ஒற்றுமை உணர்வைத்தான் லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதின் அடிப்படை தத்துவம் சூளுரைக்கிறது. இதுவும் நன்மைக்கே! ஒருவேளை அந்த இரவு இந்த இரவு என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மற்ற இரவுகளுக்கு நாம் முக்கியத்துவம் தராமல் போயிருப்போம்.

    ரமலானின் பிந்தைய அனைத்து இரவுகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளிப்பதற்காக வேண்டி கூட இறைவன் அதை மறைத்திருக்கலாம். நபியும் மறந்து போயிருக்கலாம். நடப்பது யாவும் நமது நன்மைக்கே; நாம் நடப்போம் மார்க்க ஒற்றுமைக்கே!

    Next Story
    ×