search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பல்லக்கு, கருட வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா
    X

    பல்லக்கு, கருட வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

    • பல்லக்கு வாகனத்திலும் இரவு கருட வாகனத்திலும் மலையப்பசாமி உலா.
    • நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகனத்திலும் இரவு கருட வாகனத்திலும் மலையப்பசாமி உலா வந்தார்.இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி அலங்கார'த்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதேபோல் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உடன் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகனங்களுக்கு முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து மாலை கருட சேவை நடந்தது. வழக்கமாக வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களின்போது இரவு 7 மணியளவில் கருடசேவை தொடங்கி இரவு 12 மணிவரை நடக்கும். ஆனால், தற்போது நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் மாலை 6.30 மணிக்கு கருடசேவை தொடங்கி இரவு 12 மணிவரை நடந்தது.

    தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுமன் வாகன வீதிஉலா, மதியம் 2 மணியளவில் வசந்தோற்சவம், மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

    Next Story
    ×