search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாலிக்கயிறுடன் மங்களாம்பிகை
    X

    தாலிக்கயிறுடன் மங்களாம்பிகை

    • தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
    • ஞாயிறு முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

    அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோவிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

    இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    நவராத்திரியின்போது கோவில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது.

    அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர்.

    சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.

    கோவில் அமைப்பு

    கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் வெள்ளெருக்கு மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.

    சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.

    பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத் திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.

    பிராணநாதர் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர் விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.

    இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

    காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

    சிறப்புக்கள்

    அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

    Next Story
    ×