search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: தலைமை பூசாரி மட்டும் தீ மிதித்தார்

    • அம்மனின் வீதிஉலா நடந்தது.
    • ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்தார்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழக-கர்நாடக பக்தர்கள் இனைந்து குண்டம் திருவிழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த விழாவில் தலைமை பூசாரி சிவண்ணா மட்டுமே குண்டம் இறங்குவது தனிச்சிறப்பாகும்.அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    கடந்த 7-ந் தேதி இரவு மாரியம்மன் உற்சவ சிலை மேள வாத்தியங்கள் முழங்க தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கோவில் முன்பு விறகுகள் அடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 10 மணியளவில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

    பின்னர் அம்மனின் வீதிஉலா நடந்தது. தாளவாடி முழுவதும் உள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்தார். போயர் வீதி மற்றும் அம்பேத்கர் வீதிகளில் மலர் பாதங்களால் அம்மனை அழைத்து சென்றனர்.

    அதன் பின்னர் காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு 30 அடி நீளத்தில் 4 அடி உயரத்தில் உள்ள குண்டத்தில் பக்தர்கள் ஆரவாரத்துடன் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கி தீ மிதித்தார்.

    பின்னர் பக்தர்கள் அனைவரும் குண்டத்தை தொட்டு வணங்கினர். இந்த குண்டம் திருவிழாவில் தாளவாடி தொட்டகாஜனூர் ,தலமலை, கோடிபுரம், சாம்ராஜ்நகர், சிக்கொலா, உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணிக்காக தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

    Next Story
    ×