search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவில்களில் காசு மட்டுமே பிரதானம்: சாமி தரிசனத்தில் 2 மணி நேரம் காத்திருந்த பக்தர் டுவிட்டரில் பதிவு
    X

    கோவில்களில் காசு மட்டுமே பிரதானம்: சாமி தரிசனத்தில் 2 மணி நேரம் காத்திருந்த பக்தர் டுவிட்டரில் பதிவு

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டண வழி மட்டும் உள்ளது.
    • வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம் மட்டுமின்றி ரூ.50-க்கான கட்டண தரிசன வழியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) சாமி சன்னதியில் உள்ள துர்க்கை அம்மன் அருகில் உள்ள கேட்டின் வழியாக தரிசனத்திற்காக செல்வார்கள். நேற்று அந்த பகுதியிலும் ஏராளமானோர் காத்திருந்து சென்றனர். கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தரிசனத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர், "தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டண வழி மட்டும் உள்ளது. 2 மணி நேரம் காத்திருந்தும் தரிசிக்க முடியவில்லை. இதற்கு அருணாசலேஸ்வரரே முடிவு கட்டுவார்" என்று டுவிட்டர் மூலம் முதல்- அமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பதிவிட்டு இருந்தார்.

    இதுகுறித்து அறநிலையத்துறையில் இருந்து கோவில் நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து முக்கிய பிரமுகர்கள் சென்ற சிறப்பு தரிசன வழியை கோவில் பணியாளர்கள் அடைத்து விட்டு பொது மற்றும் கட்டண தரிசன வழியில் இருந்த பக்தர்களை விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர். கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் அருகிலும், திருமஞ்சன கோபுரம் நுழைவு வாயில் அருகிலும் பார்க்கிங் வசதி உள்ளது. நேற்று பகலில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கார் மற்றும் வேனில் வந்த பக்தர்கள் பார்க்கிங் செய்ய போதிய இட வசதி இல்லாததால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அங்கு அதிக ஒலியுடன் சைரன் அடித்தபடி அதிவிரைவு படை போலீசார் வேனில் வந்தனர். போலீஸ் வாகனம் வேகமாக வருவதை கண்டதும் அங்கிருந்த கார் மற்றும் ஆட்டோ டிரைவர் செய்வது அறியாமல் அம்மணி அம்மன் கோபுரம் பகுதியில் இருந்து பே கோபுரம் செல்லும் வழியில் ஒருவர் பின் ஒருவர் செல்ல முயன்றதால் மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×