search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் ஜெயந்தி
    X

    இன்று ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் ஜெயந்தி

    • பற்பல கோவில்களுக்கும் யாத்திரை சென்றார்.
    • நாமாவை சொல்லிக் கொண்டே ஸ்ரீஅம்பாளின் சரணத்தை அடைந்தார் ஸ்ரீ தீட்சதர்.

    தியாகராஜ சுவாமிகள் சியாமா சாஸ்திரிகள் முத்து சுவாமி தீட்சிதர் ஆகிய 3 பேரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். வைதீஸ்வரன் கோவில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமியின் அருளால் ஸ்ரீ ராம சுவாமி தீட்சிதருக்கு மூத்த குமாரராக முத்து சுவாமி தீட்சிதர் கி.பி. 1775-ம் ஆண்டு மன்மத ஸ்ரீ பங்குனி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தார். இன்று (ஞாயிறு) அவரது ஜெயந்தி தினமாகும்.

    சென்னை மணலியில் வசித்து வந்த தீட்சிதரை, சிதம்பரநாத சுவாமிகள் தன்னுடன் காசி யாத்திரைக்கு அழைத்துச் சென்று ஸ்ரீ வித்யா தீட்சை தந்து மந்திர உபதேசமும் செய்து வைத்தார்.

    அங்கு இந்துஸ்தானி சங்கீதம் கற்று, தொடர்ந்து 5 வருடம் மந்திரஜபம், தியானம் செய்து கொண்டு சில சரஸ்வதி மந்திரங்களை அட்சர லட்சம் ஜபம் செய்து சித்தி செய்த ஸ்ரீ தீட்சிதருக்கு, ஒருநாள் கங்கையில் குளித்து அர்க்கியம் கொடுப்பதற்காக கைகளால் தண்ணீரை எடுக்கும் போது ஸ்ரீராமா என்னும் மந்திரம் பதித்த ஓர் அழகான வீணை தட்டுப்பட்டது. அதை தனது குருநாதரிடம் காண்பிக்க இது தெய்வத்தால் தரப்பட்ட தெய்வீக வீணை. நீ திருத்தணி சென்று முருகனை உபாசனை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டு திருத்தணிக்கு அனுப்பி வைத்தார்.

    குரு குஹா என்னும் நாமாவைச் சொல்லிக் கொண்டே திருத்தணி மலையில் ஏறிக் கொண்டிருந்த ஸ்ரீ தீட்சதரின் எதிரில் தோன்றி ஒரு முதியவர் (முருகன்) வாயைத் திற என்று சொல்லி கற்கண்டை ஸ்ரீ தீட்சிதரின் வாயில் போட்டு மறைந்து போனார். அந்த கணமே ஸ்ரீதீட்சதரின் வாக்கில் இருந்து ஸ்ரீ நாதா தி குருகு ஹோஜயதி என்று நாதவாணி துள்ளி வந்தது.

    அன்று முதல் குருகுஹ என்னும் முத்திரையைப் பதித்து ஏராளமான கீர்த்தினைகளை இயற்றினார். பற்பல கோவில்களுக்கும் யாத்திரை சென்ற ஸ்ரீதீட்சிதரின் வாக்கில் இருந்து அந்தந்த கோவில்களின் தெய்வ சக்தியே தல மகிமைகளை பாடல்களாக வெளிவரச் செய்தன. கி.பி. 1835-ம் ஆண்டு தீபாவளி அன்று மீனாட்சியின் கீர்த்தனங்களை பாடிக் கொண்டே சிவேபாஹி சிவேபாஹி என்னும் நாமாவை சொல்லிக் கொண்டே ஸ்ரீஅம்பாளின் சரணத்தை அடைந்தார் ஸ்ரீ தீட்சதர்.

    Next Story
    ×