search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் வேணுவனத்தில் சுவாமி சுயம்புவாக தோன்றிய நிகழ்ச்சி
    X

    சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றதையும், தீபாராதனை காட்டப்பட்டதையும் படத்தில் காணலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் வேணுவனத்தில் சுவாமி சுயம்புவாக தோன்றிய நிகழ்ச்சி

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    4-ம் திருவிழாவான நேற்று சுவாமி மூங்கில் காடான வேணுவனத்தில், வேணுவனநாதர் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதாவது பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வேணுவனம் என்று அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள மூங்கில் காட்டை கடந்து தினமும் பால் கொண்டு செல்வதை ராமகோன் என்பவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் இந்த வேணுவனத்தை தாண்டி செல்லும்போது குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் மரத்தால் கால் இடறி விழுந்து பால் கொட்டியது. இதை அவர் மன்னனிடம் தெரிவிக்கவே அந்த இடத்தில் வளர்ந்திருந்த மூங்கில் மரத்தை வெட்ட மன்னன் உத்தரவிட்டான்.

    இதைத்தொடர்ந்து மன்னனின் வேலையாட்கள் அந்த மூங்கில் மரத்தை வெட்டி அகற்றினர் அப்போது மூங்கில் மரத்திலிருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் மூங்கில் மரம் இருந்த பகுதியை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் தென்பட்டது. இதை காணும் பாக்கியம் பெற்ற ராமகோன், முற்றும் கண்ட ராமகோன் என்று அழைக்கப்பட்டார். இதையடுத்து பாண்டிய மன்னனின் முயற்சியால் வேணுவனநாதர் பெயருடன் நெல்லையப்பருக்கு மூலஸ்தான கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர திருவிழாவில் 4-ம் நாள் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நெல்லையப்பர் கோவிலில் நடந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில், ராமகோன் பால் கொண்டு செல்வது, அவர் கால் இடறி விழுவது, தாமிரசபையின் உள்பிரகாரத்தில் உள்ள மூங்கில் மரத்தில் வெள்ளி கோடரியால் வெட்டுவது, மூங்கிலில் இருந்து ரத்தம் சொரிவது போன்று நிகழ்வு பக்தர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு உடையவர் லிங்கபூஜையும், 8 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    Next Story
    ×