search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.
    • 7-ந்தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும்.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6-ம் நாளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்றுமாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பகல் 12 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.20 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் விண்ணை பிழக்க 4 ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆட்டம்பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ரதவீதியில் சுற்றிவந்தனர்.

    ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்ததால் நகரமே திக்குமுக்காடியது. மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் என பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

    படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு மேல் தங்ககுதிரை வாகனபுறப்பாடு நடக்கிறது. 9-ம் நாள் காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா, இரவு 9 மணிக்கு பெரியதங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறும். அன்றுஇரவு 11 மணிக்குமேல் கொடியிறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×