search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனியில் இன்று முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    X

    பழனியில் இன்று முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    • நாளை பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 15-ந்தேதி கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தந்தப்பல்லக்கில் புறப்பாடும், இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி இன்னிசை, சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு திருத்தேரோட்டமும், மாலை 4.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 15-ந்தேதி கொடி இறக்குதலுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×