search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜெபமே ஜெயம்: உங்கள் திட்டங்களை கர்த்தர் நிறைவேற்றுவார்
    X

    ஜெபமே ஜெயம்: உங்கள் திட்டங்களை கர்த்தர் நிறைவேற்றுவார்

    • உங்களைப் பாதுகாக்கும் இயேசு உங்களோடே இருக்கிறார்.
    • இயேசு உங்களுக்கு பாதுகாப்பைத் தருகிறார்.

    அன்பானவர்களே, `உங்களைப் பாதுகாக்கும் இயேசு உங்களோடே இருக்கிறார்' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தில், உங்களது பயணங்களில், எனக்கென்று யாருமே இல்லை என்று நினைக்கும் நேரத்திலும் இயேசு உங்களுக்கு பாதுகாப்பைத்தருகிறார். உங்கள் வாழ்க்கையில் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டங்கள் நிறைவேறும் வரை இயேசு உங்களோடு இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.

    பவுல் என்பவரைப் பற்றி பைபிளில் கூறியுள்ளதைப் பார்க்கலாம். இவர் ஆரம்பத்தில் இயேசுவைப் பின்பற்று பவர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்வதில் இன்பம் கண்டு வந்தார். ஒருநாள் இயேசு இவருக்கு தரிசனமாகி, `என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? நீ துன்பப்படுத்துகிற இயேசு நான் தான்' என்று கூறினார்.

    இயேசுவின் அன்பினால் கவரப்பட்ட பவுல், எருசலேம் மற்றும் நகரங்கள் தோறும் சென்று இயேசுவின் மகிமை பற்றி கூறினார். இவர் மூலம் ஏராளமானவர்கள் இயேசுவை நம்பினார்கள். இதனால் கோபமடைந்தவர்கள் இவர் மீது பொய் குற்றம் சாட்டியதால், இவர் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    அப்போது ஒரு நாள் இரவு கர்த்தர், பவுலின் அருகே நின்று, `பவுலே, திடன்கொள். நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாபுரியிலும் சாட்சி கொடுக்க வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில், சிறையில் இருந்த பவுல் மற்றும் பிற கைதிகளிடம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க கப்பல் மூலம் ரோம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கப்பல் புயல் மழையில் சிக்கிக்கொண்டது. பவுலின் எச்சரிக்கையை மீறிச்சென்ற கப்பல் பெருமழையில் சிக்கித்தடுமாறியது.

    அப்போது பவுல் அவர்கள் நடுவிலே நின்று, `மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராமல் இருக்கத்தான் இப்போதைக்கு கப்பல் பிரயாணம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனாலும், மாலுமிகளின் பேச்சைக்கேட்டு வந்து விட்டோம். இனி பயப்படாமல் திடமனதாக இருங்கள் என்று உங்களுக்குத் தைரியம் சொல்லுகிறேன்.

    நான் நம்புகிற இயேசு என்னைப் பார்த்து, 'பவுலே நீ பயப்படாதே, நீ ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நின்று என்னைப்பற்றி சாட்சி கூறவேண்டும்' என்று கூறியுள்ளார். ஆகவே என்னுடன் உள்ள உங்கள் அனைவருக்கும் தேவன் என் நிமித்தம் தயவு பண்ணியுள்ளார். ஆகையால் சகல மனுஷரே, திடமனதாயிருங்கள், பயப்படாதீர்கள். ஆனாலும் இப்போது நாம் ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும்' என்றார்.

    கப்பலில் இருந்த அனைவரும் கலக்கத்துடனே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் எல்லாரும் உணவு உண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி; "நீங்கள் நெடுநாட்களாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாய்இருக்கிறீர்கள். ஆகையால் உணவு உண்ணும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் நீந்தித் தப்பிப் பிழைப்பதற்கு அது உங்களுக்கு உதவியாயிருக்கும்" என்றார்.

    இப்படி அனைவரையும் ஆறுதல்படுத்தி, அப்பத்தை எடுத்து, எல்லோருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பங்கிட்டு வழங்கினார். அனைவரும் சாப்பிட்டார்கள். பொழுது விடிந்தபின்பு, இன்ன இடமென்று அறியாமல் சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது. கரை நெருங்கியபோது கப்பல் உடைந்ததால் அனை வரும் நீந்தி பத்திரமாக கரைசேர்ந்தார்கள்.

    கரையிலே குளிருக்காக நெருப்பு மூட்டினார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும் போது, ஒரு விரியன்பாம்பு அவருடைய கையைக் கடித்துவிட்டது. பவுல் அந்தப் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தார். தீவு மக்கள் இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    அந்தத் தீவின் தலைவனின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தான். பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம் பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினார். இது நடந்தபின்பு, தீவில் இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். இதையடுத்து தீவு மக்களின் உதவியுடன் ரோம் நகருக்கு செல்லும் கப்பலைக் கண்டு, அதில் ஏறி ரோமாபுரிக்குச் சென்றடைந்தார்கள்.

    பிரியமானவர்களே, இங்கு கப்பல் பயணத்தில் புயல் காற்று, அடைமழை, உயிருக்கு ஆபத்து, கொல்ல நினைக்கும் சதித்திட்டங்கள், விரியன் பாம்பினால் வந்த ஆபத்து, இவை எல்லாவற்றையும் தாண்டி பவுல் ரோமாபுரிக்கு சென்று ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நின்றார்.

    அதுபோலவே அன்பானவர்களே! நம்மை குறித்து தேவன் முன் குறித்த காரியங்கள் நிறைவேறும் வரை கர்த்தர் சமூகம் உங்களுக்கு முன்பாக சென்று கொண்டே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    ஆகவே சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் சரி, சூழ்ச்சிகள். பொறாமைகள், எரிச்சல்கள், கோபங்கள், மந்திர-தந்திரங்கள் என எது நமக்கு எதிராக இருந்தாலும் சரி, கர்த்தர் நமக்கு கூறியவைகளை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாழ்வில் எல்லாம் ஜெயமாக மாறும், நாம் நம்பும் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நிச்சயமாகவே உங்கள் காரியங்கள் ஜெயமாக மாறும், ஆமேன்.

    Next Story
    ×