search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புரட்டாசி பிரம்மோற்சவம்
    X

    புரட்டாசி பிரம்மோற்சவம்

    • பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உற்சவம் நடைபெறும்.
    • ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு கோடான கோடி இன்பமும் பெருகும்.

    புரட்டாசி திருவோணம், திருவேங்கடவனின் பிறந்த நாளாகத் தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது.

    இந்த திருவோண தினத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில் விசேஷ அலங்காரங்களுடன் உற்சவமூர்த்தியான திருமலை அப்பன் அமர்ந்து திருவீதி வலம் வருகிறார்.


    "திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரம்மன் தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோற்சவம் என்று அழைக்கப்பட்டது.

    கி.பி.966-ம் ஆண்டுவரை ஒருமுறை பிரம்மன் திருவிழா நடைபெற்று வந்ததாகவும், அதன்பிறகு புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றுமாக இரண்டு தடவை நடத்தப்பட்டன என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

    திருமலையின் மூன்றாம் சுற்றுச்சுவற்றில் உள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் வருடத்தில் பதினொரு பிரம்மோற்சவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. கொடியேற்றத்துடன் பிரம்ம உற்சவம் தொடங்கும்.

    பிரம்மோற்சவத்தில் ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பமும் பெருகும்.

    ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலையில் மோகினி அவதார உற்சவம் நடைபெறும். இரவு எம்பெருமான் கருடாழ்வார் மீது பவனி வந்து அருட்காட்சி தந்து அருளுகிறார்.

    கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும். இக்குடைகள் சென்னையிலிருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    கருடோற்சவ தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வர்.

    காலை, மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷவாகனம், பெரிய சேஷவாகனம், தங்கத் திருச்சி, ஹம்சவாகனம், முத்துப்பந்தல், கல்ப விருஷம், சர்வ பூபால வாகனங்கள், பல்லக்கு கருட சேர்வை, ஹனுமந்த வாகனம், சூரிய, சந்திரப்பிரபை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம் இப்படி பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருகிறார்.


    குடை, சாமரம், மங்கள வாத்தியம் முதலியவற்றுடன் வடமொழி மறையும், தென் மொழி மறையும் பாராயணம் செய்ய பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உற்சவம் நடைபெறும். இத்திருவிழா காண்போரை இன்பக்கடலில் மூழ்கச் செய்யும். மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார். இதற்கு முன்பாக வசந்த உற்சவம் நடைபெறும். வெள்ளை வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு குங்குமக் குழம்புடன் கூடிய சந்தனத்தை வாரி அள்ளி வழங்கிக் கொண்டு பவனி வருகிறார்.

    தேர் திருவிழா அன்று பகவான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவிழாவின் கடைசி தினமான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும். பின் கொடியிறக்கம் (துவஜாவரோகணம்) நடைபெற்றுத் திருவிழா இனிதே நடைபெறுகிறது.

    இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பிரம்ம உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அக்டோபர் 5 - காலையில் சின்ன சேஷ வாகனம், இரவில் அன்ன வாகனத்தில் வீதி உலா

    அக்டோபர் 6- காலையில் சிம்ம வாகனம், இரவில் முத்துப்பல்லக்கு சேவை

    அக்டோபர் 7- காலையில் கல்பவிருஷ வாகனம், இரவில் சர்வ பூபால வாகனத்தில் உலா

    அக்டோபர் 8- காலையில் மோகினி அவதாரம், இரவில் கருட சேவை நிகழ்ச்சி

    அக்டோபர் 9- காலையில் அனுமன் வாகனம், இரவில் கஜ வாகனத்தில் எழுந்தருளல்

    அக்டோபர் 10- காலையில் சூரிய பிரபை உற்சவம், இரவு சந்திர பிரபை உற்சவம்

    அக்டோபர் 11- தேரோட்டம்

    அக்டோபர் 12- பிரம்மோற்சவ விழா நிறைவு

    Next Story
    ×