search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாட்டு முறைகள்!
    X

    புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாட்டு முறைகள்!

    • புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
    • கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை ‘கன்னியா மாதம்’ என்றும் அழைப்பர்.

    தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால், அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதமாகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் 'கோவிந்தா' என்னும் திருநாமமே.


    புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன், கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை 'கன்னியா மாதம்' என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.

    பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு, துளசி தீர்த்தம் வைத்து 'கோவிந்தா.. கோவிந்தா..' என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடியும்.


    வழிபாட்டு முறைகள்

    புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்காரம் செய்யுங்கள். உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்கிரகமாகவோ இருந்தால், அதனை நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்கரிப்பது உத்தமம்.

    பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கில் ஏதாவது ஒன்றை ஏற்றவும். பின்பு பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்த உணவை, படைக்க வேண்டும். அந்த படையலில் மாவிளக்கு, துளசி தீர்த்தம் இருப்பது அவசியம்.

    பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். மா விளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்கலாம்.

    வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். பெருமாளின் உருவத்திற்கு, கற்பூர தீபாராதனை மற்றும் தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    தொடர்ந்து நைவேத்திய பிரசாதத்தையும் அனைவருக்கும் வழங்கலாம். இவ்வாறு வழிபடுவதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.மேலும் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைத்து, நிறைவான வாழ்க்கை அமையும்.

    Next Story
    ×