என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ராமபிரான் வழிபாடு செய்த ராமலிங்கேஸ்வரர்
- குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன.
- 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
கோவில் தோற்றம்
ராமாயண காலத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் இங்கே உண்டு. ராமரால் பூஜிக்கப்பட்ட சிவ தலங்களும் உண்டு. அவற்றில் ராமேஸ்வரம் போன்ற புகழ்பெற்ற திருத்தலங்கள் நமக்குத் தெரியும்.
ஆனால் குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.
கடலூர் மாவட்டம் பின்னலூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ராமர் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.
அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ராமர் சென்றபோது, பின்னலூர் என்ற கிராமத்தில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.
குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சி காலத்தில் 72 மாடக் கோவில்கள் கட்டியதாகவும், அதில் ஒன்று இக்கோவில் என்றும் கூறப்படுகிறது.
குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் விவசாய பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பூமிக்கு அடியில் இருந்து சிவலிங்கம் ஒன்றை வெளியே எடுத்தனர். இதுபற்றி மக்கள் அனைவரும் குலோத்துங்கனிடம் விபரத்தைக் கூறினர்.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற குலோத்துங்கச் சோழன், சிவபெருமானுக்கு அங்கே ஒரு ஆலயத்தை அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயத்தை மாடக்கோவிலாக அமைத்ததாகக் கூறப்படுகிறது.
வடலூர் அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரை நமக்குத் தெரியும். ஆனால் அவருக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம், இந்த ராமலிங்கேஸ்வரர் ஆலயம் தான் என்று சொல்லப்படுகிறது.
அருட்பிரகாச வள்ளலாரின் தந்தை ராமையாப்பிள்ளை, தில்லை நடராஜரை தரிசிக்க வடலூரில் இருந்து பின்னலூர் வழியாக செல்வது வழக்கம். அப்பொழுது தினமும் ஊரில் இருக்கும் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தரிசனம் செய்து தனக்கு புத்திர பாக்கியம் இல்லாத குறையை மகேசனிடம் மனதார வேண்டி இருக்கிறார்.
அவர் வேண்டுதல் பலித்து ராமலிங்கேஸ்வரர் அருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தைக்கு இக்கோவிலில் வைத்து, 'ராமலிங்கம்' என்று பெயர் சூட்டியதாக கூறுகிறார்கள். இப்படி பல சிறப்புகள் வாய்ந்தது இந்த ஆலயம்.
இந்த கோவில் அமைப்பு படி முன் மண்டபத்தின் மேல் பகுதியில் நடுநாயகமாக சிவன்- பார்வதி ரிஷப வாகனத்தில் சுதைச் சிற்பகமாக வீற்றிருக்கின்றனர். அவர்களின் இருபுறமும் வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர், விநாயகர், அனுமன், ராமர், சீதை, நந்தி ஆகியவை உள்ளன.
அடுத்தது அலங்கார மண்டபம், அங்கே நந்தி, பலிபீடம், விநாயகர் மற்றும் நால்வர் சன்னிதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தெற்கு நோக்கி அற்புதமாய் காட்சி தருகிறாள். அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு நோக்கிய கருவறையில் ராமலிங்கேஸ்வரர், வட்ட பீடத்தில் பாண லிங்கமாக காட்சி தருகிறார். அவரை வணங்கி விட்டு கோஷ்டத்திற்கு வந்தால், தெற்குமுகம் பார்த்து ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சிவ துர்க்கையை வணங்கலாம்.
பிரகாரத்தில் விநாயகர், ஸ்ரீதேவி - பூ தேவி சமேதராக சீனிவாசப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய அனைவரும் தனித்தனி சன்னிதியில் அற்புமாக காட்சி தருகின்றனர்.
இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புமிகு பிரார்த்தனைகள் பல இருக்கின்றன. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வது விசேஷமானதாகும். தொடர்ச்சியாக 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஜாதகத்தில் கிரக தோஷங்களால் தள்ளிப் போகும் திருமணங்கள் நல்ல படியாக நடைபெற, மூலவர் ராமலிங்கேஸ்வரருக்கு வில்வ மாலை மற்றும் சரக்கொன்றை மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு தோஷ பூஜையை இங்கே செய்யலாம். அமாவாசை அன்று தர்ப்பணமும், மற்ற எல்லா நாட்களிலும் முன்னோர்கள் வழிபாடும் செய்யலாம். இதுவும் ஒரு நித்திய அமாவாசை ஷேத்திரம்.
மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமைய, ஆடிப்பூரம் அன்று கன்னிப்பெண்கள் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தனை செய்தால் மனம் போல் வாழ்க்கை அமையும்.
கடன் பிரச்சனை நீங்க, குடும்ப நிம்மதி கிடைக்க தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடுகிறார்கள். அன்றைய தினம் 11 நெய் தீபம் ஏற்றி, 11 முறை வலம் வர வேண்டும்.
இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.
தில்லை நடராஜர் கோவிலில் நடைபெறுவதுபோல், இந்த ஆலயத்திலும் ஆண்டுக்கு 6 நடராஜர் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று இங்குள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்து பல விதமான மோதக கொழுக்கட்டைகள் பிரசாதமாக நைவேத்தியம் செய்யப்படும்.
கந்த சஷ்டி ஆறு நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும். பர்வதவர்த்தினி தாயாரிடம் முருகன் வேல் வாங்கி ஆலயத்தின் உள்ளே பிரகாரத்தில் சூரசம் ஹாரம் செய்யும் வைபவம் நடத்தப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய் வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் கோவில்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்