search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் இன்று சாமி தரிசனத்திற்கு குவிந்த 80 ஆயிரம் பக்தர்கள்
    X

    கோவில் நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு திறந்து வைத்த போது எடுத்த படம்.

    சபரிமலையில் இன்று சாமி தரிசனத்திற்கு குவிந்த 80 ஆயிரம் பக்தர்கள்

    • 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கிறது
    • எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.

    41 நாட்களாக நடந்த மண்டல பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கோவில் நடை அடைக்கப்பட்டது.

    அடுத்து ஜனவரி 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜிவரரூ கோவில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. வருகிற 14-ந் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கி உள்ளனர்.

    மகர விளக்கு பூஜையில் பங்கேற்க இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக நேற்றிரவே ஏராளமான பக்தர்கள் பம்பையில் காத்திருந்தனர்.

    இன்று ஒரு நாளில் மட்டும் தரிசனம் செய்ய 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. 12-ந் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்படுகிறது. 13-ந் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வருகிற 18-ந் தேதி நிறைவடைகிறது. வருகிற 19-ந் தேதி மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகைப் புரத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். அதன் பிறகு 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின் காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    சபரிமலைக்கு மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவில் சன்னிதானம் மற்றும் பம்பை முதல் நிலக்கல் வரை சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல சபரிமலை வரும் பக்தர்களுக்காக மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×