search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம்
    X

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம்

    • சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
    • நாளை இரவு 12 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளினார்.

    தொடர்ந்து காலை 10.05 மணிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் வலம் வந்த தேர் 12 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.

    தேரோட்டத்தில் சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி சரவணன், ஆணையாளர் ரவிச்சந்திரன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், பா.ஜனதா மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தர்ராஜ், நகர தலைவர் கணேசன், திருவாவடுதுறை ஆதீன சமய சொற்பொழிவாளர் சங்கரநாராயணன், சைவ சித்தாந்த சபை நிறுவனர் சண்முகவேல் ஆவுடையப்பன், இந்து முன்னணி நகர தலைவர் சங்கர், மண்டகப்படிதாரர்கள், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுக்காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×