search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிம்ம வாகினியாக வணங்கப்படும் சரஸ்வதி
    X

    சிம்ம வாகினியாக வணங்கப்படும் சரஸ்வதி

    • நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.
    • சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவை ஆகும்.

    நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது. அம்பிகையை கொண்டாடும் நாட்களில் நவராத்திரி என்பது மிகவும் விசேஷமானது. ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகை துர்க்கை அம்சமாக இருப்பதாக ஐதீகம்.

    அதற்கடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி அம்சமாக அருள்பாலிப்பதாக ஐதீகம். அதற்கடுத்த மூன்று நாட்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியாக இருந்து அனைவருக்கும் ஞானம் அருள்வதாக ஐதீகம். அந்த வகையில் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.


    கலை மற்றும் கல்வி ஆகியவற்றின் அதிபதியாக உள்ள சரஸ்வதி தேவி வெள்ளை தாமரையில் அமர்ந்து ஜடா மகுடம் சூடி, அதில் பிறை சந்திரனை அணிந்த பிரம்மாவின் மனைவியாக வழிபடப்படுகிறார்.

    அவருடைய வாகனம் வெண்மை நிறம் உள்ள அன்னப்பறவை ஆகும். வட இந்தியாவில் சில மாநிலங்களில் சரஸ்வதி தேவி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் தருவது போன்ற கோவில்களும் உள்ளன.

    பண்டைய நூல்கள் சரஸ்வதி தேவியை அறிவின் கடவுளாக, ஞானத்தின் கடவுளாக புகழ்கின்றன. படைப்புக் கடவுளான பிரம்மாவின் நாவில் சரஸ்வதி இருந்து படைப்புக்கு உறுதுணை செய்வதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    அத்துடன் சமூக நலனுக்காக செய்யப்படும் வேள்விகளை நல்லவிதமாக நடத்துவதற்கு சரஸ்வதியின் அருள் கடாட்சம் வேண்டும் என்றும் ஆன்மீக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


    புத்த மதத்தில் சரஸ்வதி தேவியை சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்து வழிபடும் முறை இருந்திருக்கிறது.

    பண்டைய காலங்களில் அரசர்களும், புலவர்களும் அறிவார்ந்த விவாதங்கள் செய்யும் போது அவர்கள் உட்கார்ந்து உள்ள ஆசனங்களில் சரஸ்வதி கொடி இணைக்கப்பட்டு இருக்கும். அதை சாரதா த்வஜம் என்று குறிப்பிடுவார்கள். அந்த கொடியில் சரஸ்வதியின் திருவுருவம் அழகாக பொறிக்கப்பட்டிருக்கும்.

    நவராத்திரி நாட்களில் ஒன்பதாவது நாளான நவமி திதியில் சரஸ்வதி தேவியை முறைப்படி வழிபடும் பொழுது ஒருவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்குவார் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன.

    அந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்வதற்கு ஒரு மேடை அமைத்து அதில் வெள்ளை விரிப்பை சரியாக விரித்து அதில் கலசம் வைத்து தேங்காய் மற்றும் மாவிலையை அதில் பொருத்த வேண்டும்.


    அதன் பிறகு சரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றை வைத்து அதற்கு வெண்மை நிற மலர்களை சூடி இனிப்பான நிவேத்யங்கள் செய்து தூப தீபம் காட்டி வழிபடலாம். இல்லாவிட்டால் வேத விற்பன்னர்களை அழைத்து வந்து மந்திரப்பூர்வ பூஜை முறைகளையும் செய்யலாம்.

    பூஜையின் முக்கிய அம்சமாக சான்றோர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பிரசாதம் அல்லது அன்னதானம் என்பதாகும்.

    வீடுகளில் அல்லது தொழில் நிறுவனங்களில் பூஜை செய்யப்படும் பொழுது அங்குள்ள ஊழியர்கள் மற்றும் இதர ஏழை மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கி அவர்கள் மனம் மகிழச் செய்வது சரஸ்வதியின் அனுகிரகத்தை பெற்று தரும் என்றும் சான்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    Next Story
    ×