search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜை
    X

    ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜை

    • அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
    • நவம்பர் 10-ந் தேதி முதல் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்றதாகும். நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

    சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

    அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே காடையூரை சேர்ந்த பேபி என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவான நெற்கதிர் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், தற்போது வைத்து பூஜிக்கப்படும் நெற்கதிர் சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும்" என நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×