search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி கோலாகலமாக நடந்தது
    X

    தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி கோலாகலமாக நடந்தது

    • 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் கோலாகலமாக நடைபெற்றது.

    இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியபடாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல்வெளிக்கு வந்தார். அங்கு நம்பெருமாள் மாலை 6 மணிவரை தங்ககுதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன், பொதுஜன சேவையும் நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக் கொள்ளையன் ஆனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்தி காட்டப்பட்டது.

    இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார். வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாசல் வழியே மணல்வெளிக்கு வந்துவிடுவதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை. 10-ம் திருநாளான 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×