search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாப்பிள்ளை அலங்காரத்தில் வீற்றிருக்கும் சுடலைமாடன்
    X

    மாப்பிள்ளை அலங்காரத்தில் வீற்றிருக்கும் சுடலைமாடன்

    • சுடலைமாடன் அலங்கார பிரியராக விளங்குகிறார்.
    • முக்கோண பீடமாக அமர்ந்துள்ளதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் சூளைவாய்க்கால் கிராமத்தில் அருள்பாலித்து வரும் வேம்படி சுடலைமாடன், கோவை மாவட்டம் சரவணம்பட்டி ஜனதா நகரில் சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சிவனணைந்த பெருமாள், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.

    மாப்பிள்ளை அலங்காரம்

    சுடலைமாடன் 3 தலைமுறைக்கு முன்பே இங்கு வீற்றிருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஊர் மக்களால் கோவில் கட்டி திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக சுடலைமாடன் கோவில்கள், குடியிருப்பு பகுதியில் இல்லாமல் தனித்து அமைந்து இருக்கும். மேலும் சுவாமி ஆக்ரோஷம் மிகுந்தவராக இருப்பார். ஆனால் கோவை வேம்படி சுடலை மாடன் சுவாமி குடியிருப்புகள் வருவதற்கு முன்பே அமர்ந்து இருந்தாலும், மக்களுக்கு காவல் தெய்வமாகவும், சாந்த சொரூபமாகவும் கருணை மிகுந்தவராகவும் திகழ்கிறார். இந்த கோவிலுக்கு சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கிறார்கள்.

    சிவன்-பார்வதி மைந்தனான சுடலைமாடன் கிழக்கில் மாப்பிள்ளை அலங்காரத்திலும், பேச்சி அம்மனின் அரவணைப்பில் மேற்கில் முண்டனாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மாப்பிள்ளை அலங்காரத்தில் கயிலாயத்தில் இருப்பது போன்று பீடம் அமைக்கப்பட்டு உள்ளதால் சுடலைமாடனுக்கு பொங்கல் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆண்டிற்கு 2 நாட்கள் மட்டுமே அசைவம் படைக்கப்படுகிறது.

    அலங்கார பிரியர்

    சுடலைமாடன் அலங்கார பிரியராக விளங்குகிறார். இவருக்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே பூஜை செய்யப்படும். மற்ற நாட்களில் சுவாமிக்கு தீபாராதனையோ, அலங்காரமோ கிடையாது.

    முக்கோண வடிவிலான பீடமாக சுவாமி அமர்ந்துள்ளதால் தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்டவை பன்னீரால் கலந்து சுவாமியின் திருமேனியில் பூசப்படும். பின்னர் வாசனை பூக்களான மல்லிகை, ரோஜா, மரிக்கொழுந்து, செண்டு, அரளி, செவ்வரளி உள்ளிட்ட பூக்கள் மாலையாகவும், தோரணமாக கட்டப்பட்டு பீடத்தில் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிக்கு புனித தீர்த்தங்கள், பன்னீர் மற்றும் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி மற்றும் இரவு 12.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அசைவ பிரியரான சத்திராதி முண்டனுக்கு ஆடு, கோழி, பன்றி இறைச்சி சமைக்கப்பட்டும், அவித்த முட்டைகள், சுருட்டு, மது வகைகள் படையலிடப்படும்.

    இந்த பூஜையில் கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து செல்கிறார்கள். இதேபோல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும்

    51 பந்தி தெய்வங்களின் முதன்மையாக கருதப்படும் சுடலைமாடனை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் மற்றும் கோர்ட்டு வழக்குகள் தீருவதுடன், திருமணம், குழந்தைபேறு கிட்டும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.

    மேலும் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சுடலைமாடனுக்கு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக வேட்டி, துண்டு, பூ மாலை, தேங்காய், பழம் வாங்கி வந்து பூஜை செய்து வழிபடுகிறார்கள். மேலும், சுடலைமாடன் அருளால் திருமணமானவர்கள் தங்களது துணையுடன் வந்து சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.

    இதேபோல் குழந்தைப்பேறு கிடைத்த தம்பதிகள் பேச்சியம்மனுக்கு சேலை, வளையல், பூ மற்றும் குழந்தை பொம்மையை வாங்கி வைத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த கோவிலில் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி (ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை) திருவிழா நடைபெறுகிறது.

    திரு விழாவின்போது சுடலைமாடனுக்கு மகுடம் சூட்டி, கணியான்கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்டவை நடைபெறும். இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டுகளிப்பார்கள்.

    சாம்பல் ஒன்றே போதும்...

    கோவை வேம்படி சுடலைமாடனுக்கு ஆடி, தை மாதங்களில் 3-வது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்வார்கள். பொதுவாக எல்லா கோவில்களிலும் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு தீர்த்தம் தெளிப்பார்கள். அதன் பின்னர் ஆடு, கோழிகள் சிலிர்த்ததும் அதனை பலியிடுவார்கள்.

    கோவை வேம்படி சுடலைமாடன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழிகளுக்கு தீர்த்தம் போடுவதற்கு பதில் சுடலைமாடனின் சாம்பல் (திருநீறு) போடப்படும். இதில் அனைத்து ஆடு, கோழிகள் சுவாமி அருளால் சிலிர்க்கும். இது போன்ற அதிசயம் இங்கு மட்டுமே நடைபெறுவதாக கோவை பக்தர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×