search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்!
    X

    புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்!

    • காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
    • புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள்.அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.


    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத் தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது. புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனை வருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் மேற்கொள் ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத் தில் வைத்துள்ளனர்.

    புரட்டாசியில் சனிக் கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.


    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    புரட்டாசி சனிக் கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.

    மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் படத்தின் முன்னர் நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். இதனால்தான் புரட்டாசி மாதம், புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது.

    Next Story
    ×