search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தோரணமலை தைப்பூச விழா: காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம்
    X

    தோரணமலை தைப்பூச விழா: காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம்

    • தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது.
    • அகத்தியர், தேரையர் தங்கிய தலம்.

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் தோரணமலையும் ஒன்று. தென் தமிழகத்தில் சிறப்பான கிரிவலம் நடக்கும் கோவில் இதுதான். அதோடு தனி ஒருவர் மேற்பார்வையில் நடக்கும் கோவில்களில் தினமும் அன்னதானம் நடக்கும் கோவிலும் இதுதான்.

    அகத்தியர், தேரையர் தங்கிய தலம். உலகம் சமநிலை அடைய இமயத்தில் இருந்து தென்திசை வந்த போது பொன்போல் மிளிறியது ஒரு குன்று. தெய்வ அம்சம் நிறைந்த அக்குன்றில் மூலி கைகள் நிறைந்து காணப்பட்டன. பெரிய யானை ஒன்று படுத்திருப்பது போன்று அது அமைந்திருந்ததால் அதனை வாரணமலை என்று அழைத்தார். பின்னர் அது தோரணமலையானது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே இந்த எழில்மிகு மலை உள்ளது. முருகப்பெருமானிடம் தமிழ் கற்ற அகத்தியர் அதற்கோர் இலக்கணம் வகுத்து பின்னர் தோரணமலையில் பல்கலைக் கழகம் போன்ற பாடசாலை அமைத்தார். மருத்துவம் உள்பட பல்வேறு பாடங்களை சித்தர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

    அகத்தியரிடம் பாடம் படித்த சீடர்களில் முக்கியமானவர் தேரையர். அவர்கள் இருவரும் இங்கு மருத்துவ சேவை செய்த போது ஸ்தாபித்த முருகன் சிலைதான் இப்போதும் குகைக்குள் அருள் குன்றாமல் இருக்கிறார். தோரணமலை முருகன் ஆரம்பத்தில் சுற்று வட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. இதன் புகழ் நாலாபுறமும் பரவ காரணமாய் இருந்தவர் அமரர் கே.ஆதிநாராயணன்.

    1960களின் இறுதி யில் கே.ஆதிநாராயணன் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். சுற்று வட்டாரம் மட்டுமே அறிந்திருந்த அந்த கோவிலை பிரபல படுத்த எண்ணினார்.

    அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரண மலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார். இதற்காக அவர் தான் வைத்திருந்த சைக்கிளிலேயே பயணம் செய்வார். அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. மேலும் அப்போது வைகாசி விசாகத்தன்று விடிய விடிய த.பி.சொக்கலால் பீடி நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை காட்ட ஏற்பாடு செய்தார்.

    அங்கு நடக்கும் சினிமா படப்பிடிப்பின் போது அவர்களுக்கு உதவி செய்து அதில் தோரணமலை பெயர் வர ஏற்பாடு செய்தார்.

    கடையம்-தென்காசி சாலையில் இருந்து தோரணமலை வரையிலான கரடுமுரடான சாலையை தார்ச்சாலையாக மாற்றியதோடு, வழியில் 3 இடங்களில் நீரோடையின் மீது பாலங்கள் அமைக்க பெரும்முயற்சி மேற்கொண்டார்.

    ஆவுடையானூரை சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் தர்மராஜ் மூலம் மலையேற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    வயது முதுமை காரணமாக கே.ஆதி நாராயணனுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருந்தார். அவரது அமரத்துவத்திற்கு பிறகு கோவில் பரம்பரை அறங்காவலராக ஆ.செண்பக ராமன் உள்ளார்.

    அவர் ஆன்மிகப்பணியோடு கோவில் மூலம் சமூகப்பணியையும் செய்து வருகிறார். தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது.

    தமிழ் மாத கடைசி வெள்ளி, ஞாயிறு மற்றும் கிரிவல நாட்களில் காலையிலும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதற்காக பலர் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார்கள். கோவில் நிர்வாகமும் அதற்கான உதவிகளை வரவேற்கிறது.தோரணமலை கோவில் மூலம் சில மாணவர்களை தத்து எடுத்து படிக்க வைக்கிறார்கள். இந்த உதவியையும் வசதி படைத்தவர்கள் மேற்கொள்ளலாம்.

    கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவ-மாணவிகள் பயன்பெற கே. ஆதிநாராயணன் பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தைப்பூச திருகல்யாணம், தமிழ்வருட பிறப்பு போன்ற பண்டிகைகளை சிலர் பொறுப்பு ஏற்று நடத்துகிறார்கள். அதேபோல் மற்ற பண்டிகைகளையும் பக்தர்கள் விரும்பினால் பொறுப்பு ஏற்று நடத்தலாம்.

    இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். அன்று விவசாயம் செழிக்க ஸ்ரீ வருண கலச பூஜை நடக்கிறது. இதுதவிர பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடக்கிறது. கிருத்திகை நட்சத்திர நாளில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    மேலும் தமிழ்புத்தாண்டு அன்று மக்கள் திரண்டு வருகிறார்கள். அன்றைய தினம் விவசாயிகள் கையால் சாதனை புரிந்தவர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப் படுகிறது. கோவிலில் தற்போது நவீன குளியலறை, கழிவறை கட்டப்படுகிறது. மேலும் திருப்பணி பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    தோரணமலைக்கு என்று உழவார குழு உள்ளது. அவர்கள் அவ்வப்போது கோவில் வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். சுனைகளையும் தூர்வாருகிறார்கள். இதுதவிர கடைசி வெள்ளி அன்று உற்சவருக்கு அபிஷேகம் செய்ய பக்தர்களே மலைமீது இருந்து தீர்த்தம் எடுத்து வருகி றார்கள். அவர்களே பல்வேறு அபிஷேகங்களை செய்து சிறப்பு பூஜையையும் நடத்துகி றார்கள்.

    எதிர்கால திட்டமாக கோவிலுக்கு குட முழுக்கு நடத்த ஆ. செண்பகராமன் திட்டமிட்டுள்ளார். அடிவாரத்திலும், மலையின் மீதிலும் மூலஸ்தானம் மட்டும் மாறாமல் நவீன முறையில் கோவிலை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளார். அதற்கான வரைபடங்களை தயாரித்துள்ளார்.

    50 ஆண்டுகளை கடந்து முருகன் அருளாலும், பக்தர்தம் உதவியாலும் இறைபணி தொடர்வதாக தெரிவிக்கிறார். இந்த இறைபணியை செய்ய விரும்புவோர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமனை தொடர்பு கொள்ளலாம். கோவிலுக்கு என்று எந்த சேமிப்பையும் அவர் வைக்கவில்லை. பக்தர்கள் கொடுப்பதை உடனே கோவிலுக்கு செலவு செய்துவிடுகிறார். இவ்வளவு இறை பணியையும் தனிப்பட்ட ஒரு குடும்பம் மட்டுமே செய்து வருகிறது. அதற்கு பக்தர்களின் உதவியும் ஒத்தாசையும்தான் காரணம். குடமுழுக்கு உள்பட பல்வேறு பணிகளை பக்தர்களே முன்னின்று செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் .

    ஊர்கூடி தேர் இழுப்பதுபோல் பக்தர்கள் ஒன்று திரண்டு அந்த திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

    தோரண மலையில் அழகுடன் கோபுரம் கட்டவும், தியானக்கூடம் அமைக்கவும். உற்சவ மூர்த்திகளுக்கு தனி சன்னதி, சிறுவர்கள் பூங்கா மற்றும் ஆன்மிக பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    Next Story
    ×