search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகாசி விசாக திருவிழா நிறைவு: முருகப்பெருமானிடம் தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி
    X

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தெய்வானை அம்மனிடம் திருஊடல் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    வைகாசி விசாக திருவிழா நிறைவு: முருகப்பெருமானிடம் தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி

    • தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார்.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் தந்த பல்லக்கு, மாலையில் தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது. நேற்று வைகாசி விசாக திருவிழா கொடிஇறக்குதலுடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்து தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனிப்பல்லக்கில் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு தேவர் தெய்வானை அம்மனிடம் தூது சென்று சமாதானப்படுத்தினார். வீரபாகு தேவராக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று திருஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார்.

    அதன்பின் கோவில் நடை திறந்து முத்துக்குமாரசுவாமியுடன், தெய்வானை அம்மன் சேர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×