search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோபுரப்பட்டியில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், சூரியன் உஷாதேவி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    கோபுரப்பட்டியில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், சூரியன் உஷாதேவி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • இன்று இரண்டாம் கால பூஜையும் நடைபெறுகிறது.
    • நாளை காலை சாந்தி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் உள்ள ஆதிநாயக பெருமாள் கோவில் 1323-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் 1342-ம் ஆண்டு ஹெய்சாள மன்னரான மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் ஒரு முறையும், 1498-ல் இலங்கை உலகன் என அறியப்பட்ட தோழப்பன் என்பவரால் ஒருமுறையும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

    இந்நிலையில், இக்கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டு, முன்புறம் சக்கரத்தாழ்வார், பின்புறம் யோகநரசிம்மர் அருள்பாலிக்கும் விக்கிரகம், நவக்கிரகங்களில் முதன்மையான சூரியன் உஷாதேவி விக்ரக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவு பெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம கோவில் கமிட்டினர் மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று இரவு யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுக்ஞை, வாஸ்துஹோமம், விஷ்வக்ஸேநர் நிவேதனம் சாற்று முறை நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால பூஜை நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணி முதல் பகல் 12 மணி வரை பூர்ணாஹூதியும், இரண்டாம் கால பூஜையும் நடைபெறுகிறது. மாலை மூன்றாம் கால பூஜை நடைபெறுகிறது. நாளை காலை 7.30 மணி முதல் த்வார, கும்ப, மண்டல பூஜை, பிரானபிரதிட்டை சாந்தி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 9.45 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் முரளிபட்டர் தலைமையில் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம கோவில் கமிட்டி தலைவர் அனந்தராமன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கணேசன், சங்கர் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×