search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
    • இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

    துபாய்:

    டிம் சவுத்தி தலைமையி லான நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 19 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. மார்க் ஷேப்மேன் அதிகபட்சமாக 46 பந்தில் 63 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தார். அயன் அப்சல்கான் 3 விக்கெட்டும், முகமது ஜவாதுல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப்கான் 29 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

    • டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 142 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 63 ரன்கள் எடுத்தார். பவுன்ஸ், நீஷம் ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்தனர்.

    இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அயனாஷ் ஷர்மா டக் அவுட்டானார்.

    கேப்டன் முகமது வசீம் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 55 ரன்கள் சேர்த்தார். ஆசிப் கான் 29 பந்தில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.

    3 விக்கெட் வீழ்த்திய ஆயான் அப்சல் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 155 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் சைபர்ட் 55 ரன்கள் எடுத்தார். கோல் மெக்கன்சி 31 ரன்னும், நீஷம் 25 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. விக்கெட் கீப்பர் அயனாஷ் ஷர்மா ஓரளவு போராடி 60 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனல் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

    5 விக்கெட் வீழ்த்திய டிம் சவுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மூவர்ண கொடி ஒளிபரப்பானது.
    • வெளிநாடுகளிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன

    துபாய்:

    சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.

    124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

    இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.

    • ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் வகிக்கிறார்.
    • .பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் டாப்-10 இடத்திற்குள் உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பகர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். விராட் கோலி 9வது இடத்தில் நீடிக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா சார்பில் சிராஜ் 4வது இடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

    இதேபோல், டி20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார்.

    • உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
    • மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

    துபாய்:

    உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன.

    ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடத்த உக்ரைன் முடிவு செய்தது. இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

    அப்போது போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது.

    இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார்.

    அதேசமயம் இந்த மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த மாநாடு போரை நிறுத்த உதவுமா? என உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.

    • துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
    • ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான முகமது அடில் கான், துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதை வாங்கும்போது அவர் தன்னை பெரும் பரிசின் வெற்றியாளராக மாற்றும் என்று கற்பனைகூட செய்திருக்க மாட்டார்.

    2018 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து துபாய் சென்ற முகமது அடில், ஒரு நாள் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்யும்போது அதில் வந்த விளம்பரத்தை கண்டு லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில், முகமது அடில் பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார்.

    இதுகுறித்து முகமது அடில் கூறுகையில், " எனது முதல் லாட்டரி டிக்கெட் என்னை முதல் ஃபாஸ்ட்5 பரிசை வென்றவராக மாற்றும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு எனது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏஇடி 25,000 (ரூ.5.5 லட்சம்) பெறுவது நம்பமுடியாதது.

    இந்த வெற்றியால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும். தனது குடும்பத்திற்காக வீடு வாங்க வேண்டும்.

    இதுபோன்ற தனித்துவமான பரிசு வழங்குவதை வேறு எந்த லாட்டரி நிறுவனத்திடம் இருந்தும் நான் பார்த்ததில்லை. இந்த வெற்றி எனது நிதி சுமைகளை நீக்கி, நிலையான இரண்டாம் நிலை வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க எனக்கு உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.

    துபாய்:

    9-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் சில மைதானங்களை ஐ.சி.சி. குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.

    • துபாய் ஷேக்கின் பெரிய ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பெரிய வாகனத்தில் முன் நிற்கும் 2 ஹம்மர் கார்கள் உண்மையிலேயே எவ்வளவு பெரியவை என்பதை காட்டுகிறது.

    கார் தொடர்பான வீடியோக்கள் இணைய தளத்தில் கொட்டி கிடக்கிறது. அவற்றில் துபாய் ஷேக்கின் பிரமாண்ட ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. துபாயில் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என அழைக்கப்படும் ரெயின்போ ஷேக்கிடம் 200-க்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பெரிய ஹம்மர் கார் குறித்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெரிய வாகனத்தில் முன் நிற்கும் 2 ஹம்மர் கார்கள் உண்மையிலேயே எவ்வளவு பெரியவை என்பதை காட்டுகிறது. இந்த கார்கள் வழக்கமான ஹம்மர் கார்களைவிட 3 மடங்கு பெரியவை ஆகும். இந்த கார்களின் சிறப்பு என்னவென்றால் இவற்றை சராசரி கார்களை போல சாலைகளில் ஓட்ட முடியும்.

    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்தது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.

    முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்தியா மழையால் டிரா ஆனது. இதனால் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்துள்ளது.

    பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (54.17%) 3-வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5-வது இடத்திலும், உள்ளன.

    • துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்தது.

    துபாய்:

    துபாய் புள்ளியியல் மையம் கூறியிருப்பதாவது:-

    துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக துபாய்க்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருவது அதிகரித்துள்ளது.

    துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 2020-ம் ஆண்டு துபாயின் மக்கள்தொகை குறைந்த போதிலும், அதனைத் தொடர்ந்து நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி இங்கு மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இதற்கு துபாய் அரசு கொரோனா பாதிப்பை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

    இத்தகைய முயற்சிகள் காரணமாக துபாயில் மக்கள்தொகை இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் மக்கள்தொகை 35 லட்சத்து 50 ஆயிரத்து 400 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 36 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம் துபாயில் மக்கள்தொகை கடந்த ஒரு ஆண்டில் 89 ஆயிரத்து 196 ஆகவும், கடந்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 595 ஆகவும் அதிகரித்துள்ளது.

    துபாயில் மக்கள்தொகை கடந்த 1960-ம் ஆண்டு இருந்ததைவிட நகர்ப்பகுதி 80 மடங்கும், கிராமப் பகுதிகளில் 170 மடங்கும் அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. வீட்டு வசதிக்கான தேவைகளும் அதிகரித்துள்ளதால் பொருளாதார மேம்பாடும் அதிகரித்துள்ளது. துபாய் நகர்ப்புற திட்டம் 2040-ன் அடிப்படையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை மேம்படுத்தவும் வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
    • சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் அசோகன், முத்தமிழ் வளவன், பொருளாளர் கண்ணதாசன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

    மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின், ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் இயக்குனர் ரொட்டேரியன், குடந்தை அசரப், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, மீடியா அஸ்கர், அமமுக அமீரக நிர்வாகி சாதிக், பால் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில் அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், முகமது சித்தீக், முத்தழகு, ஜியாவுதீன், வாகை கிரன், வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    ×