search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நிரம்பி வழிகின்றன சீன ஆஸ்பத்திரிகள்: பலிகள் குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் தகவல்
    X

    நிரம்பி வழிகின்றன சீன ஆஸ்பத்திரிகள்: பலிகள் குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் தகவல்

    • உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுகிறது.

    பீஜிங் :

    சீனாவில் தற்போது கொரோனா வைரசின் புதிய அலை எழுச்சி பெற்றுள்ளது. அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங் தென் மேற்கு பகுதி மற்றும் சிறிய நகரங்களில் வார்டுகள் நிரம்பி வழிகின்றனவாம்.

    சீனாவின் தொழில்துறை மாகாணமான ஹீபெய் மாகாணத்தில் உள்ள ஜூஜவ் நகரில் உள்ள நெரிசலான வார்டுகளில் ஆபத்தான நிலையில் உள்ள டஜன் கணக்கான வயதான நோயாளிகள் சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்படுவதை பத்திரிகையாளர்கள் நேரில் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.

    'ஜீரோ கோவிட்' கொள்கை என்ற பெயரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சீனா கொண்டு வந்த தீவிர கட்டுப்பாட்டுக்கொள்கை மக்களை விரக்தியில் ஆழ்த்தி, போராட்டத்தில் குதிக்க வைத்தது. இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன. பலர் தங்கள் வீடுகளிலேயே சோதனை செய்து கொள்கின்றனர்.

    அதன்பிறகுதான் இப்போதைய கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    கொரோனாவால் உயிர்ப்பலிகள் பெருகி வந்தாலும், கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளாக அவை காட்டப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகளால் உயிரிழப்புகள் நேரிடுவதாகத்தான் சீனா பதிவு செய்கிறது.

    பீகிங் பல்கலைக்கழகத்தின் முதலாம் எண். ஆஸ்பத்திரியின் தலைவர் வாங் கெய்கியாங், ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகளால்தான் நோயாளிகள் சாகிறார்கள் என கூறி உள்ளார்.

    ஆனால் தகன மையங்கள், உடல்களால் நிரம்பி வழிவதாகவும், உடல்களை தகனம் செய்து விட்டு, அஸ்தியைப் பெறுவதற்காக மக்கள் கார்களில் காத்திருப்பதாகவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

    ஜூஜவ் நகரில் இறுதிச்சடங்குக்கான பொருட்களை விற்பனை செய்கிற கடைக்காரர்கள், ஒரு தகன மைய ஊழியர் இதுபற்றி கூறும்போது, "கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது முதற்கொண்டு, சாவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு தினமும் 3 அல்லது 4 உடல்களை எரித்த தகன மையங்களில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் தினமும் 20 முதல் 30 உடல்கள் எரிக்கப்படுகின்றன" என தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் (புதன்கிழமை) கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. ஆனால் அந்த நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து 5 ஆயிரத்து 241 என சீன தேசிய சுகாதார கமிஷன் பதிவு செய்துள்ளது. இதற்கான காரணத்தைக்கூட பதிவு செய்யவில்லை.

    உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலை தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான், "கொரோனா இறப்பு குறித்த சீனாவின் வரையறை மிகவும் குறுகலானது" என விமர்சித்துள்ளார்.

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "கொரோனாவால் சாகிறவர்கள், நோய்த்தொற்றின் தீவிரத்தால் பல்வேறு மாறுபட்ட உறுப்புகளின் செயலிழப்பால்தான் மரணத்தை தழுவுகிறார்கள். எனவே, கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு, சுவாசக் கோளாறு உள்ள ஒருவருக்கு கொரோனா இறப்பைக் கண்டறிவதைக் கட்டுப்படுத்துவது, கொரோனாவுடன் தொடர்புடைய உண்மையான இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும்" என தெரிவித்தார்.

    சீனாவின் கொரோனா நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக வருகிற தகவல்கள் கவலை அளிக்கின்றன" என தெரிவித்தார்.

    Next Story
    ×