என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும்.
    • கால் தசைகளை பலப்படுத்தும்.

    இன்றைய காலகட்டத்தில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் கூட பலரும் வெறுங்காலுடன் நடப்பதற்கு விரும்புவதில்லை.

    தெருக்கள், சாலைகள் சமநிலையின்மை, சுத்தமின்மை, உடைந்த கண்ணாடி, கட்டிட பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடப்பது உள்ளிட்ட காரணங்கள் வெறுங்காலுடன் நடப்பதற்கு தடையாகவும் இருக்கின்றன.


    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் பலரும் வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் புல்வெளிகள், மணல் பரப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் வெறுங்காலுடன் சில நிமிடங்களாவது நடக்கும் வழக்கத்தை பின்பற்றினால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமானவை பற்றி பார்க்கலாம்.

    இயற்கையுடன் தொடர்பு ஏற்படுத்தும்

    வெறுங்காலுடன் நடப்பது மண்ணின் ஆற்றலுடன் இணைந்திருப்பதை உணர உதவும். ஆஸ்திரேலியர்கள் இயற்கை மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்வதாக கூறுகிறார்கள்.

    மன அழுத்தம் குறையும்

    வெறுங்காலுடன் நடக்கும்போது பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி கால்களுக்கும், நரம்புகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து இயக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவும். தளர்வான, மன அழுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் இந்த நடை பயணம் உதவிடும்.

    தோரணையை மேம்படுத்தும்

    வெறுங்காலுடன் நடப்பது கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களை துரிதமாக வேலை செய்ய தூண்டும். உடல் தோரணையை மேம்படுத்தவும் துணை புரியும். காலணிகளை அணிந்து நடக்கும்போது கால்களின் முழு அசைவையும் அனுபவிக்க முடியாது. அது ஒரு விதத்தில் உடல் தோரணையை மாற்றலாம்.

    அடிக்கடி வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் உடலை நன்கு சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம் என்றும் ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்கள்.

    கால் தசைகளை பலப்படுத்தும்

    காலணிகளை அணிவது கால்களின் இயல்பான இயக்கத்தை மட்டுப்படுத்தலாம். அதே சமயம் வெறுங்காலுடன் நடப்பது கால்களின் தசைநார்கள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவிடும்.


    ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    வெறுங்காலுடன் நடப்பது உள்ளங்கால்களுக்கு அழுத்தம் கொடுக்கும். அதன் மூலம் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். தொடர்ந்து கால் பாதங்களை தரையில் அழுத்தி மசாஜ் செய்வது கால்களில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.


    மென்மை அடையும்

    வெறுங்காலுடன் செல்வது உள்ளங்கால்களில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இதன் விளைவாக பாதங்கள் மென்மையாக இருக்கும்.

    நினைவாற்றலை அதிகரிக்கும்

    வெறுங்காலுடன் நடப்பது நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும். ஆஸ்திரேலியர்கள் விழிப்புடன் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும் என்று கருதுகிறார்கள்.

    • உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி.
    • ஆரோக்கியமற்ற உணவுகள் உடலின் உள் உறுப்புகளை பாதிக்கிறது.

    உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை பரவலாக காணப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி என்கிறது மருத்துவ உலகம். இது உடலில் இருப்பதை அறிந்து அதற்கான சரியான வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்கள், மருத்துவம் எடுத்துக் கொள்ளாத போது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.


    ரத்த அழுத்தத்தை தவிர்க்க 4 விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். முதலாவதாக, தவறான உணவுப்பழக்கங்கள் ரத்த அழுத்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    ஆரோக்கியமற்ற உணவுகள் உடலின் உள் உறுப்புகளை பாதிக்கிறது. தவறான உணவால் உருவாகும் ரத்த அழுத்தத்தை தவிர்க்க அன்றாட உணவில் முழு தானியங்கள் மற்றும் எளிதான புரதங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

    அன்றாடம் சிறிது பழங்கள் மற்றும் தாராளமாக காய்கறிகளை சாப்பிடுதல் அவசியம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.



    இரண்டாவதாகதினமும் 30 நிமிட வேக நடை ரத்த அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. நடைப்பயிற்சி இதயத்தில் ரத்தத்தை சீராக பம்ப் செய்ய உதவுகிறது. இதய தமனிகளில் அழுத்தத்தை குறைக்கிறது.

    மூன்றாவதாக உடல் எடையை சீராக பராமரிப்பது ரத்த அழுத்தத்தை தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பை தடுக்க சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு 8 மணிக்குள் உணவு உண்ண வேண்டும்.


    நான்காவதாக நாள்பட்ட மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் காலப்போக்கில், இது நீடித்த உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். தேவையற்ற சிந்தனைகள் மற்றும் அவசியம் இல்லாத வேலைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

    எனவே இவை அனைத்தையும் கைவிடும் போது ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனநிலையை மேம்படுத்தும்.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    பருவ மழைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பலரும் சளி, இருமல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். அதற்கு மாறாக மழையை ரசிப்பதும், மழை சாரலில் உலவுவதும் சிலருக்கு பிடிக்கும்.


    குளிர்ந்த நீரில் குளியல் போடுவது பலருக்கும் ஆனந்த அனுபவமாக அமையும். ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். 'குளிர் நீர் தெரபி' எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    தசை வலியை போக்கும்

    உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும். ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும்.

    மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும். லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.


    தூக்கத்திற்கு உதவிடும்

    குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.

    ''குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக'' நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


    மனநிலையை மேம்படுத்தும்

    ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும்.

    அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப்படுத்தவும் வழிவகுக்கும்.


    மனச்சோர்வை போக்கும்

    நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும். இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும்.

    அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும். மனத்தெளிவை உண்டாக்கும். கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.

    • உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.
    • இதயநோய் மற்றும் பக்கவாதநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் அதனை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதனை முறையாக மேற்கொள்ளவும், உடல் நலத்திற்கு பயனுள்ளதாக அமையவும் 6-6-6 நடைப்பயிற்சி விதி உதவிடும்.


    காலை 6 மணி, மாலை 6 மணி என 60 நிமிடங்கள் நடப்பதும், 6 நிமிடங்கள் வார்ம் அப் பயிற்சி செய்வதும், 6 நிமிடங்கள் உடலை குளிர்வடையச் செய்வதும்தான் இந்த விதிமுறையின் அடிப்படை. அதனை செய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்

    நடைப்பயிற்சி செய்வதாக இருந்தாலும் அதனை தொடங்குவதற்கு முன்பு 'வார்ம்-அப்' பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கை, கால்களை நீட்டியும், மடக்கியும் செய்யும் இந்த பயிற்சியும், மென்மையான உடல் இயக்கமும் தசைகள் மற்றும் மூட்டு பகுதிகளை தயார் செய்வதற்கு துணைபுரியும்.

    மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும், உடல் வெப்பநிலையையும் கூட்டும். இதய அமைப்புக்கும் இதமளித்து நடைப்பயிற்சியை சுமுகமாக தொடங்க வழிவகைசெய்யும்.

    நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல் நடைப்பயிற்சியை செய்து முடித்ததும் உடலை ஆசுவாசப்படுத்துவதும் முக்கியமானது. இதுவும் வார்ம் அப் பயிற்சி போல்தான்.

    ஆனால் கை, கால்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க தேவையில்லை. அவைகளை மென்மையாக அங்கும், இங்கும் அசைத்தும், நீட்டி மடக்கியும், குனிந்து நிமிர்ந்தும் உடலை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

    அப்படி 6 நிமிடங்கள் செய்து வருவது இதயம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும், தசைகளின் விறைப்புத்தன்மை குறைவதற்கும் வித்திடும்.

    மறுநாள் நடைப்பயிற்சி தொடங்குவதற்கு உடலை நெகிழ்வாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். உடல் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.

    அதாவது 6-6-6 விதி என்பது ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு மணிநேரம் நடப்பது, பிறகு வார்ம் அப் செய்து உடலை குளிர்விக்கும் பயிற்சி முறையாகும். இதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்றது. மற்ற பயிற்சியை மேற்கொள்பவர்களும் பின்பற்றலாம்.


    காலை 6 மணி

    தினமும் சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன.

    புதிய காற்றை சுவாசிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் அது சிறந்த நேரமாக அமையும். அத்துடன் உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.

    அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் வித்திடும். பிற உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதிய நேரம் கிடைக்காவிட்டாலும் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதும், நடைப்பயிற்சி செய்வதும் இதயநோய் மற்றும் பக்கவாதநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஐரோப்பிய இதயவியல் சங்கம் கூறுகிறது.


    மாலை 6 மணி

    மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவிடும். அன்றைய நாளின் வேலைப்பளுவின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வழிவகை செய்யும். அத்துடன் மாலை நேர நடைப்பயிற்சி உடலை தளர்வடைய செய்து நிம்மதியான தூக்கத்திற்கு வித்திடும்.

    அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் சிந்தித்து பார்ப்பதற்கான நேரமாகவும் மாலை நேர நடை பயிற்சியை மாற்றிக்கொள்ளலாம். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சிறிது நேரத்தையாவது இந்த நடைப்பயிற்சியை செய்வதற்கு ஒதுக்கலாம். அது முடியாவிட்டால் அலுவலக வளாகத்திலாவது 2 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம்.


    60 நிமிடம்

    அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும். இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், நடைப்பயிற்சியை மட்டுமே தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடியவர்கள் வாரத்தில் 5 முறையாவது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    அப்படி தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும். அப்படி ஒரு மணிநேரம் நடப்பது உடல் நலனில் அக்கறை கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.

    • புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது.
    • புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது.

    புரதம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. தசைகள், தோல், முடி, நகங்கள் போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியமானது.

    புரதம் என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது. இந்த அமினோ அமிலங்கள் வெவ்வேறு வரிசைகளில் இணைந்து பல்வேறு வகையான புரதங்களை உருவாக்குகின்றன.


    நம் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலங்களை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று அழைக்கிறோம். இந்த அத்தியாவசிய அமினோ அமிலங்களை நாம் உணவின் மூலமாகவே பெற வேண்டும்.

    புரதம் பொதுவாக அனைத்து வகையான உணவுகளிலும் காணப்படுகிறது. ஆனால் சில உணவுகளில் அதிகமாகவும் சில உணவுகளில் மிகவும் குறைந்த அளவிலும் காணப்படுகிறது.

    மேலும் அசைவ உணவுகளில் காணப்படும் புரதம் நிறைவுற்ற புரதம் எனவும் சைவ உணவுகளில் காணப்படும் புரதம் முழுமையற்ற புரதம் இரு வகையாக உள்ளது. இப்போது, நாம் எவ்வளவு புரதத்தை உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

    புரதம் உட்கொள்வது நமது உடல் எடை மற்றும் பாலினத்தைப் பொறுத்தது. ஆய்வுகளின்படி, சராசரி வயது வந்தவருக்கு ஒரு உடல் எடையில் புரதம் 0.83 கிராம்/கிலோ ஆகும்.

    இதன் மூலம், 70 கிலோ எடையுள்ள ஒருவர் தினமும் 58 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இது 200 கிராம் கோழியை உட்கொள்வதற்கு சமம்.

    உங்கள் உணவில் தரமான புரதத்தின் அளவை அதிகரிக்க, இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், மீன், பருப்புகள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற தானியங்கள் போன்ற சில முக்கிய உணவு ஆதாரங்களைச் சேர்க்கலாம்.


    உங்கள் உணவில் புரதம் ஏன் முக்கியமானது?

    கலோரி, சர்க்கரை மற்றும் உப்பு நுகர்வு ஆகியவற்றைக் கண்காணிக்கும் போது, போதுமான புரத நுகர்வு உறுதிப்படுத்துவதும் முக்கியம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பிற்கு புரதம் அவசியம், இது செல்லுலார் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

    உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வு வழக்கத்தின் ஒரு பகுதியாக செல் ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி புரத உட்கொள்ளலை உறுதி செய்வது அவசியம். புரதங்கள் அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கின்றன, அவை பெரும்பாலும் கட்டுமானத் தொகுதிகள் என குறிப்பிடப்படுகின்றன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க கணிசமான அளவு புரதத்தை உட்கொள்வது அவசியம்.

    புரதம், தசை செல்களின் வளர்ச்சி மற்றும் பழுது பார்ப்புக்கு அவசியம். குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசை வளர்ச்சியை அதிகரிக்க போதுமான அளவு புரதம் தேவைப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு முறிவிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக புரதம் மிகவும் முக்கியம். உடலில் உள்ள பல ஹார்மோன்கள் புரதத்தால் ஆனவை. குறிப்பாக, இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு புரதம் அவசியம்.

    • ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை.
    • முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடலாம்.

    ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும்.

    அதாவது இன்ஸ்டன்ட் ஓட்சில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதை அடிக்கடி எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை அதிகரிக்கலாம்.


    ஓட்சில் நிறைய வகைகள் உள்ளன. ரோல்டு ஓட்ஸ் அல்லது ஸ்டீல் கட் குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் போன்றவை ஆரோக்கியமானவை. இவற்றில் ஒன்றை 30 கிராம் அளவு எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடலாம்.

    தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கும். வேர்க்கடலையில் நல்ல புரதம் அதிகம் உண்டு என்றாலும் அதில் கலோரிகள் மிக அதிகம்.

    சோளத்திலும் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அதையும் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். உங்களுக்கு வயிற்று உப்புசமோ, வாயு பிரிவதோ இருந்தாலும், வயிறு அழுத்தமாக இருப்பது போன்றோ உணர்ந்தாலும் ஓட்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் அல்லது குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கி பயன்படுத்த வேண்டும்.


    30 கிராம் ஓட்சை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளி துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படி சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம்.

    எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்சை இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள்... ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.

    • ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
    • ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.

    வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பல நேரங்களில் தைராய்டு அல்லது பி.சி.ஓ.டி., பி.சி.ஓ.எஸ்., வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிற நோய்களால் எடை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்குகிறது.


    அதிக எடை மற்றும் இடுப்பில் சேரும் கொழுப்பு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணி கணக்கில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து டயட்டை பின்பற்றுகிறோம். ஆனால் இன்னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    உடல் எடையை யோகா பயிற்சி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மேலும் ஆசனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை என இருமுறை செய்ய முயற்சிக்கவும்.

    இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் 15 நாட்களுக்குள் உங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். யோகா ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.


    புஜங்காசனம்

    புஜங்காசனம் என்பது இரண்டு வார்த்தைகளால் ஆனது. புஜங் என்றால் பாம்பு என்றும் ஆசனம் என்றால் தோரணை என்றும் பொருள். இதை செய்யும் போது உடல் பாம்பு போல மாறும். எனவே இது கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் செய்வதால் வயிற்று தசைகள் விரிவடையும். உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.

    செய்முறை:

    முதலில் தரையை பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தோள்களுக்கு கீழே வைக்க வேண்டும். பாதங்களை ஒன்றாக வைக்க வேண்டும்.

    இப்போது மூச்சை உள் இழுத்துக்கொண்டு பின்தலை, தோள்கள் இவர்றை 30 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும்.

    வயிற்றுப்பகுதி தரையில் இருப்பதையும், தோள்கள் அகலமாகவும், தலை சற்று உயர்த்தப்பட்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதன்பிறகு கால் விரல்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஆசனத்தை 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் மெதுவாக தலையை கீழே கொண்டு வந்து பிறகு மூச்சை வெளியே விட வேண்டும்.


    வசிஷ்டாசனம்

    இந்த ஆசனம் செய்யும் போது உடலின் சமநிலை ஒரு கை மற்றும் உள்ளங்காலில் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் வயிற்று தசைகள் நீட்டப்படும். இது கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    செய்முறை:

    சமநிலை ஆசனத்துடன் தொடங்க வேண்டும். இடது உள்ளங்கையை தரையில் உறுதியாக வைத்துக்கொண்டு வலது கையை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். முழு உடலையும் வலது பக்கம் திருப்ப வேண்டும்.

    வலது பாதத்தை தரையில் இருந்து தூக்கி இடது பாதத்தின் மேல் வைக்க வேண்டும். வலது கையை உயர்த்தி, விரல்களை மேல்நோக்கி வைக்க வேண்டும்.

    முழங்கால்கள், குதிகால் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில் இருப்பதையும், கைகள் மற்றும் தோள்கள் இரண்டும் நேர் கோட்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    சிறிது நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று இந்த யோகாவை இடதுபக்கம் செய்ய வேண்டும்.


    ஷலபாசனம்

    இதை செய்யும் போது உடல் ஒரு பூச்சியை போல் மாறும். எனவே இது வெட்டுக்கிளி தோரணை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையும், கொழுப்பும் வேகமாக குறையும். மேலும் தசைகள் வலுவடைந்து மலச்சிக்கல் நீங்கும்.

    செய்முறை:

    முதலில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தொடைகளுக்கு கீழே வைக்க வேண்டும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்து மூச்சை பிடித்து பின்னர் கால்களை ஒன்றாக உயர்த்த வேண்டும்.

    முழங்கால்கள் நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கன்னம், நெற்றியை தரையில் வைக்க வேண்டும். 10 வினாடிகள் ஆசனத்தில் இருக்க வேண்டும். கால்களை மெதுவாக கீழே இறக்கி பின்னர் மூச்சை வெளியே விட வேண்டும்.

    • உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருக்க வேண்டும்.
    • ஜிம் செல்லும் போது ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும்.

    ஜிம்முக்கு செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனாலும் ஜிம்மில் சில விதிமுறைகளை கடைபிடிக்காமல் உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்கு பின்னர் ஜிம்முக்கு செல்வதையே நிறுத்திவிடுகிறார்கள்.


    ஜிம்முக்கு செல்பவர்கள் இந்த 7 விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    * ஜிம்முக்கு செல்லும் போது டி-ஷர்ட், டிராக் பேண்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருக்க வேண்டும்.

    * முதல்முறையாக ஜிம் செல்லும் போது ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளை செய்யும் திறன், உடலின் சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ. மதிப்பு ஆகியவற்றை பரிசோதித்து அதன்பிறகே உடற்பயிற்சியை தொடங்க வேண்டும்.


    * உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு 5 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சிகள் அவசியம். பின்னர் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்போது தான் உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட கோளாறுகள் தடுக்கப்படும்.

    * உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளை செய்வதால் உடல் எடை குறையும். ஆனால் உடல் ஃபிட்டாக இருக்காது. எனவே ஒரு மணிநேர உடற்பயிற்சியில் 40 நிமிடம் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடம் வலுவூட்டும் பயிற்சிகளை செய்யலாம்.


    * உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிக்க கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. நாக்கு உலரும் போதெல்லாம் தண்ணீர் பருகலாம். உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து தேவையான தண்ணீர் குடிக்கலாம்.

    * வாரத்துக்கு ஒரு நால் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுக்கலாம். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே அடுத்தவாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும்.


    * உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை தளத்தும் வண்ணம் சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்த பயிற்சியை உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர்.
    • மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம்.

    இன்று பல்வேறு காரணங்களால் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பெரும் அச்சம் பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.


    சுவாசப்பயிற்சி:

    பொதுவாக சுவாசப்பயிற்சி மேற்கொள்வது மனதை திறம்பட நடுநிலையில் செயல்பட வைக்க உதவுகிறது. மேலும் ஆழமாக சுவாசிக்கும் போது நரம்பு மண்டலம் நிதானமாக பாதுகாப்பாக இருக்கத்தொடங்குகிறது. இது பீதியை குறைத்து மனதை மகிழ்ச்சியாக இருக்க உதவிபுரிகிறது.


    ஓய்வெடுத்தல்:

    தொடர் மன அழுத்தம், கடுமையான சூழ்நிலைகள் இவைகள் யாவும் தினசரி வழக்கமாக மாறும்போது உடல் பீதி அடைவது இயற்கையானது. இந்த் சூழ்நிலைகளில் இருந்து நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள நம் உடலுக்கு சிறிது நேரத்தை ஒதுக்குவது அவசியமாகும்.

    இதற்கு நாம் தினமும் ஒரு பயணம் செல்லலாம். இயற்கையை ரசிப்பது, இசையை கேட்பது, பாடல் பாடுவது போன்ற மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம். அதற்கான நேரத்தை ஒதுக்கலாம்.

    அமைதியாக இருத்தல்:

    நம் மனதில் பழைய கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள் இருக்கும் போது நம்மிடம் எதுவும் இல்லை என்ற மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். இந்த மாதிரி நேரங்களில் நாம் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

    எனவே யோகா, தியானம் மற்றும் பிற நினைவாற்றல் நுட்பங்களை செய்யலாம். இது மனதை பொறுமையாக நிதானமாக மற்றும் அமைதியாகவும் உணர வைக்கிறது.


    நண்பர்கள்:

    நம்மை சுற்றி நேர்மறையான நபர்கள் இருப்பது நமக்கு தானாகவே மகிழ்ச்சியை தருவதுடன் நேர்மறை எண்ணங்களையும் வளர்க்க உதவுகிறது. எனவே நாம் நம்மை சுற்றியுள்ளவர்களை தேர்ந்தெடுத்து நம்மை வழிநடத்த அனுமதிக்கலாம். இது வாழ்க்கையை மென்மேலும் உயர வழிவகுக்கும்.

    இந்த வழிமுறைகளின் உதவியுடன் நாம் நம்முடைய மனதை பதட்டத்தை ஏற்படக்கூடிய மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்க்கையை பெறலாம். 

    • பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம்.
    • ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.

    நம்முடைய மூதாதையர்கள் கையாண்ட பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம். ஆழ்ந்து சுவாசித்து மூச்சை உள் இழுத்து வெளியிடும் இந்த பயிற்சியானது யோகாவின் ஒரு அங்கமாக விளங்குகிறது.

    உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தக்கூடியது. இவை இரண்டின் நலனையும் மேம்படுத்தக்கூடியது. பிரணாயாமம் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    மன அழுத்தம் - பதற்றத்தை குறைக்கும்

    பிரணாயாமம் பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது மனதை அமைதிப்படுத்தும் திறனாகும். இந்த ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.


    செரிமான பிரச்சனையை போக்கும்

    பிரணாயாமம் பயிற்சி மூலம் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த சுவாசம் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'வேகஸ்' நரம்பை தூண்டும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்கவும் உதவும்.

    ரத்த அழுத்தத்தை சீராக்கும்

    பிரணாயாமம் பயிற்சியை வழக்கமாக தொடர்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும். இதயத்துடிப்பு சீராக நடைபெற ஊக்குவிக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும்.

    இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

    இந்த பயிற்சியானது சுவாச முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், மன அழுத்த அளவைக் குறைப்பதன் காரணமாகவும் இதய நோய் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துவிடும். ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும் சீராக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

    சோர்வை போக்கும்

    பிரணாயாமம் செல்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க செய்யும். அதனால் உடல் ஆற்றலின் அளவும் அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டும்.

    சோர்வை நெருங்கவிடாமலும் தடுக்கும். நாள் முழுவதும் அதிக விழிப்புடனும், உற்சாகத்துடனும் செயல்பட வைத்துவிடும்.


    மன தெளிவை கொடுக்கும்

    பிரணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் கவனச்சிதறல்கள் கட்டுப்படும். கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனமும் தெளிவு பெறும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் செறிவையும் அதிகரிக்கச் செய்யும். நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், அறிவாற்றல் செயல்பாடு போன்றவையும் மேம்படும்.

    உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்

    பிரணாயாமம் பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்திடும். மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், எதிர்மறை உணர்ச்சிகளை குறைப்பதன் மூலமும் ஆழ் மன நலனை பேணுவதற்கு வித்திடும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.


    நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும்

    மூச்சை ஆழ்ந்து இழுத்து மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி சுவாச செயல்முறைகளை ஊக்குவிக்கும். சுவாச மண்டத்தை பலப்படுத்தி நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கவும் செய்யும். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

    ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்

    இந்த பயிற்சி உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவிடும். குறிப்பாக தைராய்டு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ். எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுவாச பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.


    நச்சுக்களை நீக்கும்

    இந்த பயிற்சிக்காக நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழ்ந்து சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும். அப்போது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையும் நடக்கும். இந்த உள்ளுறுப்பு சுத்திகரிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்தும்.

    • இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
    • ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.

    இயற்கையை நேசிப்பவர்கள் நிச்சயம் மலையேற்றம் செய்வதற்கு ஆசைப்படுவார்கள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி வழியே நடந்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி, இயற்கை அழகை ரசித்தபடி மலை மீது ஏறும் அந்த பயணம் ஆனந்த அனுபவத்தை கொடுக்கும். கூடவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும். அவற்றுள் சில...


    1. இதய ஆரோக்கியம்

    'ஹைகிங்' எனப்படும் மலையேற்றம் செய்வது இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதையும் மேம்படுத்தும். இதய நோய் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

    2. தசை

    மலையேற்றத்தின்போது பயணிக்கும் நிலப்பரப்பின் தன்மையை பொறுத்து தசைகளுக்கு கிடைக்கும் நன்மை மாறுபடும். மலையின் உச்சிப்பகுதியை நோக்கி ஏறும்போது தொடையின் தசை பகுதிகள், முழங்கால்களின் பின் பகுதி தசைகள், இடுப்பின் பின் பகுதி தசைகள் வலுவடையும். மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பு, முழங்கால்கள், முதுகு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெறும்.

    3. எடை மேலாண்மை

    கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மலையேற்றம் சிறந்த வழிமுறையாக அமையும். எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையானது மலையேறும் பாதையில் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் மலையேறுபவரின் உடல் எடையை பொறுத்து மாறுபடும்.


    4. எலும்பு அடர்த்தி

    மலையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எலும்புகளை பராமரிக்கவும் உதவும். உயரமான, தாழ்வான, மேடான, பள்ளமான என பல்வேறு நிலப்பரப்புகளில் நடப்பதால் ஏற்படும் அழுத்தமும், நெகிழ்வுத்தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். எலும்பு வளர்ச்சியையும் தூண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

    5. மனநலம்

    இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கும். மலைப்பிரதேசங்களில் நடந்தபடி நேரத்தை செலவிடுவதும், அங்கு நிலவும் அமைதியான சூழலும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இந்த ஹார்மோன் ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்த வழிவகுக்கும்.


    6. சமநிலை

    மலைப்பகுதி போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் நடப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சமநிலையை பேண உதவிடும். திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.

    குறிப்பாக வயதானவர்களுக்கு அதிக பலனை கொடுக்கும்.

    7. சுத்தமான காற்று

    இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும், உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதிலும் மலையேற்றம் செய்யும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

    இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதற்கும் துணை புரியும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க இது அவசியம்.

    • 8 வடிவத்தில் நடக்கும்போது இடுப்பு, வயிறு போன்ற உடல் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல்பட தூண்டப்படும்.
    • ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் உதவிடும்.

    வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு '8' நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் வடிவத்தை வரைந்து விட்டு நடக்க தொடங்கினால் போதும். அது நடப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. அவற்றுள் முக்கியமானவை என்னென்ன என்று பார்ப்போமா?

    * வடக்கு-தெற்கு திசையை நோக்கியவாறு 8 வடிவில் கோடுகளை வரைந்து கொள்ள வேண்டும். பின்பு வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி நடக்க தொடங்க வேண்டும். பின்பு தெற்கில் இருந்து வடக்கி நோக்கி நடைப்பயிற்சியை தொடர வேண்டும். இப்படி கடிகார திசையிலும், அதற்கு எதிரெதிர் திசையிலும் தலா 15 நிமிடங்களுக்கு இந்த பயிற்சியை மேற்கொண்டு வரலாம்.

    * இந்த பயிற்சியின்போது 8 வடிவ கோட்டின் மீது மட்டுமே கவனம் பதிந்திருக்க வேண்டும்.

    * கூடுமானவரை செருப்பு, ஷூ அணியாமல் வெறுங்காலில் நடப்பதற்கு முயற்சி செய்யலாம். அப்படி வெறுங்காலில் நடப்பது கூடுதல் நன்மையை பெற்றுத்தரும்.

    * நமது உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில்தான் நமது உள் உறுப்புகளின் முக்கிய இணைப்பு புள்ளிகள் அமைந்துள்ளன. நடக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக உள் உறுப்புகள் அனைத்தும் துரிதமாக செயல்பட தொடங்கும். அது சார்ந்த ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற உதவிடும்.

    * 8 வடிவத்தில் நடக்கும்போது இடுப்பு, வயிறு போன்ற உடல் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல்பட தூண்டப்படும்.

    * 30 நிமிடம் மேற்கொள்ளும் இந்த பயிற்சி சுவாசத்திற்கும் பலம் சேர்க்கும். மூக்கடைப்பு இருந்தால் அதில் இருந்து விடுபடவும் முடியும். இரு நாசித்துவாரங்களும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கான சூழல் உருவாகும்.

    * நுரையீரல் மற்றும் சைனஸ் குழியில் சளி சேர்ந்திருந்தால் அது கரைவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

    * தினமும் இரண்டு முறை அரை மணி நேரம் இந்த பயிற்சி செய்தால் பாத வெடிப்புகள், முழங்கால் வலிகள் உள்ளிட்டவையும் குணமாகுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    * இந்த பயிற்சியின்போது ஆழ்ந்து சுவாசிப்பதன் காரணமாக ஐந்து கிலோகிராம் அளவுக்கு ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவதால், நுரையீரலில் சேர்ந்திருக்கும் சளியும் வெளியேறும். ஆக்சிஜன் அதிகமாக உட்கொள்ளப்படுவதால் உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும்.

    * தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன் மற்றும் முழங்கால் வலிகள், முடக்கு வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை கட்டுப்படும்.

    * இந்த பயிற்சியை தொடர்வது கேட்கும் சக்தி மேம்படும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

    * ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் உதவிடும்.

    * கண் பார்வையை மேம்படுத்தும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கும் வித்திடும். வரையப்பட்டிருக்கும் கோடுகளை கூர்ந்து கவனித்தபடி செல்வதால், கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்று, கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    * இந்த பயிற்சி முதுமையை தள்ளிப்போடவும் செய்துவிடும். இளமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட வைக்கும்.

    ×