search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இடுப்பில் உள்ள அதிக சதையை குறைக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்
    X

    இடுப்பில் உள்ள அதிக சதையை குறைக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்

    • திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும்.
    • கழுத்து வலியைப் போக்குகிறது. முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது

    வடமொழியில் 'பரிவ்ருத்த' என்ற சொல்லுக்கு 'சுற்றி' என்றும், 'த்ரி' என்றால் 'மூன்று' என்றும் 'கோண' என்றால் 'கோணம்' என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி வந்து மறுபக்க காலைப் பிடிப்பதால் இந்தப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இது Revolved Triangle Pose என்று அழைக்கப்படுகிறது.

    திரிகோணாசனத்தில் கூறப்பட்டுள்ளது போல், பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வாதாலும் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாக நிலையான தன்மையும், பக்குவமான மனமும், பிரபஞ்சப் பேராற்றலை ஈர்க்கும் தன்மையும் உருவாகும்.

    பலன்கள்

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டையும் பலப்படுத்துகிறது. முதுகுவலியைப் போக்குகிறது

    நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. கழுத்து வலியைப் போக்குகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    இடுப்பில் உள்ள அதிக சதையைக் குறைக்க உதவுகிறது. கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால்களுக்கு பலத்தையும் அளிக்கிறது. மாதவிடாய் வலிகளைப் போக்க உதவுகிறது. சையாடிக் பிரச்சினையைப் போக்க உதவுகிறது. மனக்கவலையைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.

    இடது கால் பாதத்தைச் சற்று வலதுபுறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும். மூச்சை வெளியேற்றியவாறு மேல் உடலை வலதுபுறம் நோக்கித் திருப்பவும். இடது உள்ளங்கையை வலது பாதத்தின் வெளிப்புறமாகத் தரையில் வைக்கவும். வலது கையை மேல் நோக்கி உயர்த்தவும். வலது கை தோளுக்கு நேர் மேலாக இருக்க வேண்டும்.

    தலையைத் திருப்பி மேல் நோக்கி உயர்த்திய கையைப் பார்க்கவும். அல்லது, நேராகப் பார்க்கவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால் மாற்றி இந்த ஆசனத்தைப் பயிலவும்.

    குறிப்பு

    தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள், இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

    தீவிர கழுத்து வலி உள்ளவர்கள் தலையை மேல் நோக்கித் திருப்பாமல் நேராக பார்த்தவண்ணம் இந்த ஆசனத்தைப் பழகலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கீழ் நோக்கி செய்யலாம்.

    Next Story
    ×