search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்...
    X

    தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்...

    • பெண்களுக்கு ஒருவரப்பிரசாதமாய் இந்த பயிற்சிகள் இருக்கும் என்று சொல்லலாம்.
    • ஜாக்கிங் செய்யும் போது கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.

    உடல் பருமன் என்னும் பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் இடுப்பு, பிட்டம் போன்ற பகுதிகளில் தான் அதிக சதையைக் கொண்டிருக்கிறார்கள். உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த பகுதியையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளில் இறங்குவது நல்லது.

    உடல் ஃபிட்டாக தேவைப்படும் நாட்களை விட சரியான முறையில் பயிற்சி செய்தால் குறைந்த நாட்களில் தொடையைக் குறைத்து அழகிய கால்களை ஃபிட்டாக வைக்கலாம் என்கிறார்கள் உடற்பயிற்சியாளர்கள்.

    தொடைப்பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க வேண்டுமென்றால் கால்களுக்கான பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

    கால்களுக்கு பிரத்யேகப்பயிற்சி அளிக்கும் ஜாக்கிங், வாக்கிங், ரன்னிங்,சைக்ளிங் போன்றவற்றைச் செய்யலாம்.உடல் கொஞ்சம் ஒத்துழைத்தால் நீண்ட தூர பயணங்கள் கூட நன்மை தரும்.

    மிதமான நடைபயிற்சி காலை, மாலை அரைமணி நேரம் என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்யுங்கள். வேகமாக கையை வீசிக்கொண்டு மூச்சிறைக்க நடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மிதமான வேகத்துடன் கூடிய நடைபயிற்சியைக் கட்டாயம் அரைமணி நேரமாவது செய்ய வேண்டும்.

    ஜாக்கிங் செய்யும் போது கால்களுக்கு நல்ல பயிற்சி தரும். பரந்த இடத்தில் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். கண் முன் அழகான தொடையைக் கொண்டு வந்து ஜாக்கிங் செய்யுங்கள். தொடர்ந்து ஜாக்கிங் செய்வதை விரும்புவீர்கள்.

    இளம் பெண்கள் வலிமையான தொடையைப் பெறுவதற்கு ரன்னிங் செய்வது நல்ல பயிற்சியாக இருக்கும். வீட்டின் மொட்டை மாடியில் அல்லது வீட்டினுள் இருக்கும் ட்ரெட் மில்- லில் ஓடலாம். ஆனால் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது மட்டும் பயிற்சியாளரின் ஆலோசனை அவசியம்.

    உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து தசைகளும் வேலை செய்யும் பயிற்சி என்றால் அது சைக்கிள் பயிற்சிதான். அதிலும் கால் தசைகளுக்கு வலுகொடுத்து தொடையில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்க அற்புதமாக உதவுகிறது சைக்கிள் பயிற்சி.

    தினமும் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டுங்கள். இதைப் பயிற்சியாகவும் செய்யலாம். கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி பயன்பாட்டுக்கும் சைக்கிள் பயன்படுத்துவது கால்களுக்கும் தொடைகளுக்கும் வலு கொடுக்கும். அதோடு தொடர்ந்து செய்யும் சைக்கிள் பயிற்சியில் இரண்டு கால் தசைகளும் ஃபிட்டாக இருக்கும்.

    காலையில் பயிற்சிக்கான விரிப்பு போட்டு கை மற்றும் கால்களை தளர செய்து நேராக நின்று இரண்டு கைகளையும் முன்புறம் நீட்டி பாதி அமர்ந்த நிலையில் (சேர் போஸ்) இருப்பது போல் கால் மூட்டுகளை மடக்கி அதே போஸில் 10 நொடிகள் இருக்க வேண்டும்.

    பிறகு நேராக நின்று 10 நொடிகள் கழித்து மீண்டும் இதே போல் தொடையை வளைத்து நிற்க வேண்டும். தினமும் 10 முறை இப்படி செய்துவரவும். பயிற்சியைத் தொடங்கும் போது ஆரம்பத்தில் கால்களில் வலி அதிகமாக இருக்கும் அதனால் படிப்படியாக பயிற்சி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்யும் போது தொடையில் கொழுப்புகளும் படிப்படியாக குறைய தொடங்குகிறது.

    இந்தப் பயிற்சிகளோடு உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பது நல்லது. குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×