search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?: பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து
    X

    கடின உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?: பயிற்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் கருத்து

    • எடுத்த எடுப்பில் கடின பயிற்சி செய்வது ஆபத்தானது.
    • வயதுக்கு, உடலுக்கு ஏற்றவாறு பயிற்சி எடுக்க வேண்டும்.

    உடற்பயிற்சி...

    என்ற வார்த்தையை கேட்கும்போதே சிலருக்கு அளவு கடந்த உற்சாகமும், சிலருக்கு சிறிதளவு தயக்கமும் உண்டாகும். ஏனெனில் உடலை மேம்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதனை அடையும் பொருட்டு சிலர் அதற்கான வழிமுறையை சரியாக பின்பற்றுவதில்லை. இதன்காரணமாக உடலில் சிறு காயங்கள் முதல் எலும்பு முறிவு உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளும் உண்டாகின்றன. சில நேரங்களில் இதனால் உயிரிழப்பும் நடந்து வருவது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகவே உள்ளது.

    ஆம்.. தற்போது முறையான வழிகாட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில், தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை எடுத்துகொள்ளாமல் சிலர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது நாட்டின் அனைத்து மக்களிடமும் பேசு பொருளாகியது. இந்த இறப்புக்கு காரணம் என்னவென்று ஆராயும்போது, அவர் சரியான தூக்கமில்லாது உடற்பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    இதேபோல் சமீபத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த ஆணழகன் போட்டிக்கு சென்ற சேலத்தை சேர்ந்த ஹரிகரன் என்ற 21 வயது வாலிபர், பயிற்சி எடுத்த சில நிமிடங்களில் திடீரென மரணம் அடைந்தார்.

    உடற்பயிற்சி செய்யும்போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?..

    தற்போதைய சூழலில் இது தொடர்கதையாகி வருவது ஏன்? என்பது குறித்து உடற்பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    உடற்பயிற்சி ஆர்வம்

    உடற்பயிற்சியாளர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

    உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும், ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், உடல் கட்டமைப்பில் சாதிக்க வேண்டும் என இப்படி வெவ்வேறு காரணங்களை கொண்டு பலர் ஜிம்மிற்கு வருகின்றனர். இதேபோல் மருத்துவரின் அறிவுரையின் பேரிலும், சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உடல் கட்டுக்கோப்பில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவும் சிலர் வருவதுண்டு.

    இதில் பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்றவுடன் உடல் கட்டமைப்பு வந்து விடும் என்று கருதுகின்றனர். மேலும் அதனை தமது சிந்தனையில் வலுவாக விதைத்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் ஜிம்மிற்கு வந்த ஆரம்பம் முதலே அதிகப்படியான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இப்படி செய்யும் போது அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    எந்த ஒரு செயலுக்கும் வழிகாட்டுதல் என்பது அவசியமான ஒன்று. ஏனெனில் வழிகாட்டுதல் இல்லாத செயல் நமக்கு ஆபத்தை உருவாக்கக்கூடும். அதுபோல தான் உடற்பயிற்சியிலும்.

    புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்பும் நபர் தனக்கான வழிகாட்டியை சரியாக தேர்வு செய்வது அத்தியாவசிய மானதாகும். ஜிம்மில் சேர விரும்பும் நபர் தமக்கு பயிற்சி அளிக்கும் நபரின் அனுபவத்தையும், அவரது திறனையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் மூலம்தான் நாம் சரியான உடற்பயிற்சியை பெற முடியும். இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    உயிரிழப்புகள் நிகழ்வது ஏன்?

    தற்போதைய சூழலில் ஜிம்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இப்படி புதிதாக உருவாகும் ஜிம்களில் முறையான பயிற்சி பெற்ற உடற்பயிற்சியாளர்கள் இருப்பார்களா என்றால் அதற்கு இல்லை என்ற ஒரே பதிலே வெளிப்படுகிறது. 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை ஒரு ஜிம்மில் உடற்பயிற்சி எடுத்துக் கொண்ட நபர்களும் தற்போது ஜிம் நடத்தி வருகிறார்கள்.

    இதை அங்கு பயிற்சி பெற வரும் நபர்கள் அறிந்து கொள்வதில்லை. ஏனெனில் கட்டணம் குறைவு என்பதால் இதுபோன்ற ஜிம்மிற்கு பலர் செல்கின்றனர். முறையாக பயிற்சி பெறாத அந்த நபர், பயிற்சி பெற வருபவரின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ளாமல், அனைவருக்கும் அளிப்பது போன்ற பொதுவான உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார். இதன் காரணமாக அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.

    தற்போதைய காலத்தில் பெண்களும் தங்களது உடல் கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், ஜிம்களை நாடி வருகின்றனர்.

    கடின பயிற்சியால் ஆபத்து

    நிஜாமுதீன் (சர்வதேச தடகள பயிற்சியாளர்):-

    எடுத்த எடுப்பில் கடின பயிற்சி செய்வது ஆபத்தானது. வயதுக்கு, உடலுக்கு ஏற்றவாறு பயிற்சி எடுக்க வேண்டும். அதை பற்றி விளக்க ஜிம்மில் தகுந்த பயிற்சியாளர் இருக்கிறாரா? என்பதை கவனிக்க வேண்டும். இந்தியாவில் பெங்களூரு, கொல்கத்தா, பாட்டியாலா போன்ற நகரங்களில் என்.ஐ.எஸ். என்ற தேசிய விளையாட்டு கல்வி மையம் உள்ளது. இங்கு டிப்ளமோ படித்து சான்றிதழ் பெற்றவர்களிடம் பயிற்சி பெற்றால் சரியாக இருக்கும். ஆனால் அங்கீகாரமற்ற சான்றிதழை வைத்துக் கொண்டு சிலர் பயிற்சி மையங்களை நடத்துகிறார்கள். அது போன்ற இடங்களில் பயிற்சி பெறுவது சரியாக இருக்காது.

    ஆலோசனை பெறுவது அவசியம்

    சித்தரஞ்சன் (நீளம் தாண்டும் வீரர்) :-

    20 வயதான நான் 65 கிலோ எடை இருக்கிறேன். எனவே எடை மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்மில் பயிற்சி செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் எந்த விளையாட்டில் சிறப்பாக இருக்கிறார்களோ அதற்கு தகுந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடனடி எடைகுறைப்பு, எடைகூட்டுவதற்கு செயற்கையான புரதச்சத்து உணவுகளை பயன்படுத்த வேண்டியதில்லை.

    உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் நானி (கூடலூர்):

    வலுவான உடலை பெற உடற்பயிற்சி ஒரு மனிதனுக்கு முக்கியம். குறிப்பிட்ட வயதை எட்டும்போது இதயத்தில் ரத்த ஓட்டத்தின் செயல்பாடு 8 சதவீதம் குறைகிறது. உடற்பயிற்சி செய்யும்போது நீரிழிவு, ரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப்படுகிறது. உடற்பயிற்சி நிலையத்தில் தகுந்த அனுபவம் உள்ள பயிற்சியாளர்களிடம் கற்க வேண்டும். மேலும் அவர்கள் உடலில் ஏதேனும் நோய்கள் அல்லது குறைபாடுகள் இருப்பின் பயிற்சியாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

    நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்(பொது மருத்துவம்) டாக்டர் குமார்:

    உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி நிலையத்துக்குதான் செல்ல வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. நடைபயிற்சி, ஓட்டபயிற்சி, நீச்சல், யோகா போன்றவை நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வதாக இருந்தால், நன்கு தகுதி பெற்ற பயிற்சியாளரின் ஆலோசனையோடு பயிற்சிகளை செய்து வருவது சிறந்தது.

    முதலில் பயிற்சிகளை அடிப்படைகளில் இருந்து தொடங்கி, சரியான நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாளில் அதிகப்படியான உடற்பயிற்சி செய்யக்கூடாது.

    இதய பரிசோதனை அவசியம்

    கோவை அரசு ஆஸ்பத்திரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் நம்பிராஜன்:-

    முறையான பயிற்சி இன்றி திடீரென ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது அதிகப்படியாக எடையை தூக்கினால் உடனே அவருக்கு இதய துடிப்பு அதிகமாகி திடீர் இதய இறப்பு (சடன் ஹார்டியாக் டெத்) ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பெமிலியல் ஹைப்பர் கொலஸ்ட்ரால் லிமியா என்ற இதய வால்வுகளில் கொழுப்பு படிதல் இயற்கையாகவே இருக்கும். உடற்பயிற்சி மையத்தில் சென்று அதிகப்படியாக எடையை உடனே தூக்கும்போது அதிகப்படியாக அழுத்தத்தால் ரத்த குழாய் கொழுப்பு அடைப்பானது திடீரென வெடித்து விடும். இதனால் கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உடற்பயிற்சிகு செல்லும் முன்பு இ.சி.சி., எக்கோ போன்ற இதய பரிசோதனை செய்வது அவசியம்.

    Next Story
    ×