search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    நடைப்பயிற்சி - ஜாக்கிங் - யோகா: எதை தேர்ந்தெடுக்கலாம்?
    X

    நடைப்பயிற்சி - ஜாக்கிங் - யோகா: எதை தேர்ந்தெடுக்கலாம்?

    • பெரும்பாலானவர்களின் விருப்பத்தேர்வாக நடைப்பயிற்சி இருக்கிறது.
    • சிலர் ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் எளிமையாக செய்யக்கூடிய பயிற்சிகளையே பலரும் விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்களின் விருப்பத்தேர்வாக நடைப்பயிற்சி இருக்கிறது. சிலர் ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    நடக்க, ஓட முடியாதவர்கள், அத்தகைய பயிற்சிகள் மீது ஆர்வம் காட்டாதவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அத்துடன் யோகாசனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றுள் எந்த பயிற்சி மேற்கொள்வது சிறப்பானது என்று பார்ப்போம்.

    * நடைப்பயிற்சி செய்வது எளிதானது என்பதால் எல்லா வயதினருமே தினமும் அதனை மேற்கொள்ளலாம். அது மூட்டுகளுக்கும் பலம் சேர்க்கும்.

    * தவறாமல் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    * நடைப்பயிற்சி செய்தபடி இயற்கை சூழ்ந்த இடங்களில் உலவுவது மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

    யாருக்கு சிறந்தது?

    * உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுபவர்கள் முதல் முயற்சியாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மூட்டுவலி உள்ளவர்களும் நடைப்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

    * உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இலகுவான உடல் செயல்பாடுகளை விரும்பும் நபர்கள் நடைப்பயிற்சி செய்து வரலாம்.

    * பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தின் ஒரு அங்கமாக உடல் நலன் மீது அக்கறை கொள்ள ஆர்வம் காட்டுபவர்களும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    ஜாக்கிங் நன்மைகள்

    * தினமும் ஜாக்கிங் பயிற்சி செய்து வருவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். இதய அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

    * உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஜாக்கிங் உதவும்.

    * ஜாக்கிங் செய்யும் வழக்கத்தை தொடர்வது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குறிப்பாக எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்யும்.

    யாருக்கு சிறந்தது?

    * மிகவும் கடினமான ஏரோபிக் உடற்பயிற்சி முறையை நாடுபவர்களுக்கு ஜாக்கிங் பயிற்சி சிறந்தது.

    * உடலில் சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் ஜாக்கிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

    * ஓடுவது உள்பட பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புபவர்கள் ஜாக்கிங்கை தேர்ந்தெடுக்கலாம்.

    யோகா நன்மைகள்:

    * தினமும் யோகா செய்து வருவது உடல் நெகிழ்வுத்தன்மை அடைய உதவும்.

    * யோகாவின்போது சுவாச செயல்பாடுகள் மேம்பட்டு உடலையும், மனதையும் தளர்வடைய செய்யும். மன அழுத்தத்தை குறைக்கவும் வித்திடும்.

    * பல யோகாசன 'போஸ்கள்' முக்கிய தசைகளை பலப்படுத்த உதவுகின்றன.

    யாருக்கு சிறந்தது?

    * மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்க முயற்சிப்பவர்கள் யோகாசனத்தை நாடலாம்.

    * பதற்றத்தை தணிக்கவும், நெருக்கடியான சூழலில் மீண்டும் பதற்றம் ஏற்படாமல் நிலைமையை சுமுகமாக கையாளவும் நினைப்பவர்கள் யோகாசனம் செய்து வருவது பலன் கொடுக்கும்.

    எது சிறந்த உடற்பயிற்சி என்பது அவரவரின் தனிப்பட்ட உடல் நலம், மருத்துவ சிகிச்சை, உடற்தகுதி உள்ளிட்டவற்றை சார்ந்தது. எந்த உடற்பயிற்சி ஏற்புடையதாக இருக்கும் என்பது பற்றி உங்களது குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்தாலோசித்து அதன்படி செயல்படுவது உடல் நலனுக்கு வலிமை சேர்க்கும்.

    Next Story
    ×