search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    அக்காரவடிசல் எப்படி செய்வது?
    X

    அக்காரவடிசல் எப்படி செய்வது?

    • இந்த ரெசிபியை நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள்.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.

    தேவையானவை:

    பச்சரிசி கால் கிலோ,

    பச்சைப் பருப்பு-100 கிராம்,

    வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்)

    ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்.

    இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.

    அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது. கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும்.

    அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.

    செய்முறை:

    அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள். பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.

    அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.

    வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள். ஒரு லிட்டர் பாலைச் சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள். இறுக இறுக பால் சேருங்கள். கிளறுங்கள்.

    பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள். இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள். அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.

    கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.

    நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள். சூப்பராக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.

    Next Story
    ×