search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    வறண்ட சருமத்துக்கான ஆயுர்வேத அழகுகுறிப்புகள்
    X

    வறண்ட சருமத்துக்கான ஆயுர்வேத அழகுகுறிப்புகள்

    • சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
    • சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

    மஞ்சள் சாமந்திப்பூ:

    சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

    சீமை சாமந்திப்பூ:

    சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

    பப்பாளி:

    பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

    கற்றாழை:

    சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

    வாழைப்பழம் மற்றும் தேன்:

    வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

    பார்லி:

    பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

    சந்தனம்:

    சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

    மூலிகைத் தேநீர்:

    சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

    Next Story
    ×