search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தனியாக வசிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தனியாக வசிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள்

    • சுய பாதுகாப்பை முன்னிறுத்தி மன வலிமையுடன் எதிர்கொள்ளுங்கள்.
    • ஸ்மார்ட் பூட்டுகளை கொண்ட கதவுகள் வந்துவிட்டன.

    படிப்பு, பணி நிமித்தமாகவோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ நகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதற்கேற்ப இன்றைய நவீன தொழில்நுட்பம் பாதுகாப்பு அரணாக அமைந்திருப்பதால் பலரும் தனிமை சூழலில் வாழ பழகிக்கொண்டிருக்கிறார்கள்.

    எனினும் ஒருசில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவும். அதற்கு வித்திடும் வழிமுறைகள் சில...


    சுய பாதுகாப்பு

    பெண் தனியாக வாழ்வது ஆபத்தானது என்ற மாயை தோற்றத்தில் இருந்து விடுபடுங்கள். அதுவே பயத்தையும், பீதியையும் அதிகரிக்கச் செய்யும். சுய பாதுகாப்பை முன்னிறுத்தி மன வலிமையுடன் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.

    பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு. அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானது.


    வீட்டு பாதுகாப்பு

    வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் வீட்டு உரிமையாளர் நிறுவியுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை நம்ப வேண்டாம். கதவுகள் வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவற்றை மாற்றிவிடுங்கள்.

    கதவின் பக்கவாட்டில் இரும்பிலான கிரில் கதவுகளை நிறுவுங்கள். அத்துடன் கதவில் 'லென்ஸ்' பொருத்துங்கள். அது வீட்டுக்கு யார் வந்திருக்கிறார் என்பதை கதவை திறக்காமலே தெரிந்து கொள்ள உதவும்.

    இப்போது பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் பூட்டுகளை கொண்ட கதவுகள் வந்துவிட்டன. 'பாஸ்வேர்ட்' அல்லது 'பயோமெட்ரிக்' மூலம் கைரேகை, கருவிழி மூலம் இயங்கும் டிஜிட்டல் சாதனங்களை பொருத்துவது, காலிங் பெல் மற்றும் வீட்டின் முகப்பு பகுதியில் பாதுகாப்பு கேமரா பொருத்துவது என பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

    யாராவது கதவின் முன்பு நடமாடினாலோ, பூட்டை பரிசோதித்தாலோ உங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படியான சாதனங்களாக அவை அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    இத்தனை பாதுகாப்புக்கு மத்தியிலும் நாய் வளர்ப்பது மன ரீதியாகவும் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்க செய்துவிடும்.


    தற்காப்பு பயிற்சி பெறுங்கள்

    பாதுகாப்பு விஷயத்தில் பெண்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. பாதுகாப்பையும், துணிச்சலையும் பெற்றுத்தரும் தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வது அவசியமானது. அவை ஆபத்தான சூழ்நிலைகளில் உதவிடும்.

    அடிப்படை பயிற்சிகளையாவது கற்றுக்கொள்ள தற்காப்பு பயிற்சி வகுப்புகளில் சேருவது நல்லது. 'பெப்பர் ஸ்பிரே', 'ஊக்கு' உள்ளிட்ட சாதனங்களை எப்போதும் உடன் வைத்திருங்கள். எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அணுகுங்கள்.


    சுற்றுப்புறங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

    அண்டை வீட்டார் உள்பட சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வது பாதுகாப்பாக தோன்றினாலும் சுற்றுப்புறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பாதுகாப்பான பகுதி எது? பாதுகாப்பற்ற பகுதி எது? என்பதை வரைமுறைப்படுத்த வேண்டும். அதில் பாதுகாப்பான பகுதியை உறுதி செய்து கொண்டுவிட்டு நடமாட வேண்டும்.

    குறிப்பாக ஆள் நடமாட்டமில்லாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக நடப்பதையும், இரவு நேரத்தில் தனியாக பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்ற விவரத்தை புதியவர்கள் யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுபோல் தங்களுக்கு தெரியாத நபர்கள், ஓட்டுநர்கள், டெலிவரி செய்பவர்கள் போன்றவர்களிடமும் தெரியப்படுத்தக்கூடாது.


    தொடர்பில் இணைந்திருங்கள்

    ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், யாராவது உங்களை சந்திக்க வரும்போதும் அது பற்றிய தகவலை உங்கள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடத்தில் உங்கள் நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அவசர காவல் உதவி எண் (100), பெண்கள் உதவி எண் (181) உள்ளிட்டவற்றை செல்போனில் பதிவு செய்து வையுங்கள். அது அவசர தேவையின்போது பதற்றமில்லாமல் அணுகுவதற்கு வழிவகை செய்யும். அண்டை வீட்டாருடன் வலுவான பந்தத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

    அவசர உதவி தேவைப்படும் சமயங்களில் பக்கபலமாக இருப்பார்கள். உள்ளூர் மகளிர் சுய உதவிக் குழுக்களுடனும் இணைய முயற்சியுங்கள். அவர்களின் உதவியும் வழிகாட்டுதலும் பயனுள்ளதாக அமையும்.


    சமூக ஊடகங்களில் கவனமாக இருங்கள்

    சமூக ஊடகங்களில் ஆர்வம் காட்டினாலும் நீங்கள் பதிவிடும் பதிவுகள், புகைப்படங்கள் வாயிலாக தனியாக வாழ்கிறீர்கள் என்ற விஷயத்தை குறிப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

    மேலும், வசிப்பிடம், விரிவான முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் இணையத்தில் பதிவிடுவதை தவிருங்கள்.

    Next Story
    ×