search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தமிழர் பாரம்பரிய சமையல் பாத்திரங்களின் மகிமை
    X

    தமிழர் பாரம்பரிய சமையல் பாத்திரங்களின் மகிமை

    • சமீபகாலமாகவே, நாம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.
    • நம்மால் பாரம்பரிய சமையல் பாத்திரங்களுக்கு மாற முடியவில்லை.

    நம்முடைய வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. பரபரப்பான வாழ்க்கை முறைக்குள் சிக்கிக்கொண்டிருப்பதால், எல்லாமே `ரெடிமேட்' ஆகிவிட்டது. சமீபகாலமாகவே, நாம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.

    அப்படி இருந்தும், நம்மால் பாரம்பரிய சமையல் பாத்திரங்களுக்கு மாற முடியவில்லை. நாம் பயன்படுத்தும் நிறைய பாத்திரங்கள், நவீன கிச்சன்களுக்கு ஏற்ப கெமிக்கல் கோட்டிங் நிறைந்தவையாகவே இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய கல் சட்டிகள், இரும்பு பாத்திரங்களும் ஒருசிலரின் கிச்சன்களை மட்டுமே அலங்கரிக்கின்றன.

    பாரம்பரிய சமையல் பாத்திரங்கள்?

    குழி பணியார சட்டி பார்த்திருக்கிறீர்களா..? நன்கு கனமாக காட்சியளிக்கும். முழுமையாக, இரும்பிலேயே தயாராகி இருக்கும். அதேபோல, நல்ல தடிமனான இரும்பு தோசைக்கல் பார்த்திருப்பீர்கள். அதேபோல, கருப்பு நிறத்தில், தடித்திருக்கும் ஆப்பச் சட்டியை பார்த்திருப்போம். இப்படி, தூய்மையான இரும்பில், எந்தவித கெமிக்கல் கோட்டிங்கும் இல்லாமல் தயாராகும் இரும்பு சட்டியில்தான், நம்முடைய முன்னோர்கள் சமைத்து சாப்பிட்டனர். 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்தனர்.

    ஆனால், இத்தகைய பாரம்பரிய சமையல் பாத்திரங்களின் பயன்பாடு, இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த இரும்பு சட்டிகளை பயன்படுத்துவதும், பராமரிப்பதும் கடினம் என தப்புக்கணக்கு போட்டு, வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

    உண்மையில், இரும்பு-கல் பாத்திரங்களை பயன்படுத்துவது சிரமமா?

    இல்லவே இல்லை. தற்போது வரும் இரும்பு பாத்திரங்கள், பழக்கப்படுத்தியே (Pre-seasoned) வருகின்றன. அதை வாங்கி, ஒருமுறை வெங்காயம் வதக்கி பயன்படுத்த ஆரம்பிக்கலாம். பயன்படுத்தி முடித்தவுடன், தண்ணீர் இல்லாமல் எண்ணெய் பூசி விட்டால், இரும்பு-கல் பாத்திரங்கள் வெகுவருடங்களுக்கு நீடிக்கும்.

    புதிய இரும்பு பாத்திரங்களை பழக்கப்படுத்த சிலர் தயக்கம் காட்டுவதால், இப்போது பாத்திர தயாரிப்பு நிறுவனங்களே, அந்த வேலைகளை (பிரீ-சீசனிங்) செய்து கொடுத்துவிடுகின்றன. உண்மையில், இது சுலபமான மற்றும் ஆரோக்கியமான முறை.

    நவீன பாத்திரங்களுக்கும், பாரம்பரிய இரும்பு பாத்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்?

    பான், கடாய்... இப்படி நவீனமாக தயாராகும் எல்லா பாத்திரங்களிலும், கெமிக்கல் கோட்டிங் கொடுக்கிறார்கள். உணவு அடிபிடிக்காமல் சமைக்கலாம் (நான்-ஸ்டிக் கடாய்), கல்லில் தோசை ஒட்டாமல் எடுக்க முடியும் (நான்-ஸ்டிக் பான்)... என சமையல் பணிகளை சுலபமாக்குவதாக எண்ணி, கெமிக்கல் கோட்டிங் நிறைந்த பாத்திரங்களையே நாம் பயன்படுத்துகிறோம். பி.ஏ.எஸ்., பி.ஓ.எஸ்., டெப்லான்... என நீளும் கெமிக்கல் கோட்டிங், நம் உணவுடன் கலக்கும்பட்சத்தில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உண்டாக்க கூடும் என கண்டறிந்திருக்கிறார்கள்.

    ஆனால், நம் தாத்தா-பாட்டி பயன்படுத்திய இரும்பு பாத்திரங்கள், உணவோடு சேர்த்து இரும்புச் சத்தையும் கொடுக்கின்றன. இரும்புச்சத்து, அன்றாட உணவுடன் நம் உடலில் சேரும்போது அனிமியா, ஹீமோகுளோபின், இரும்புச்சத்து குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் அதிகரிக்கும். அதுதான், தமிழர் பாரம்பரிய சமையல் பாத்திரங்களின் மகிமை.

    Next Story
    ×